Skip to main content

டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!

Published on 22/11/2017 | Edited on 22/11/2017
டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!

இந்தியாவில் 20 சதவீதம் பேர் தினமும் இரண்டு டாலருக்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி பேர் பிச்சை எடுக்கும் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஹைதராபாதில் வருகின்ற நவம்பர் 28-30 உலக தொழில் முனைவோர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். காவல்துறை இந்த தடைக்கும், மாநாட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும், பிச்சைகாரர்களால் விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது, ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளும் இதில் உட்படுத்தப்படுவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், அவர்களுக்கு புதிய துணிகள் மற்றும் இருப்பிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் கைரேகையும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இனியும் அவர்கள் பிச்சை எடுத்தால் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் எனவும் கூறியுள்ளது.  



ஹைதராபாத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை காவல்துறை அதிகாரிகள் மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். போலீஸ் விசாரணையில் அதில் சில கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இருந்ததும் தெரியவந்தது.



இப்போதைக்கு மறைத்து வைத்துவிட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என நினைக்கும் அரசு அவர்களுக்கான நிரந்தர தீர்வை கொடுக்க நினைக்காதது ஏன்? உலக தெலுங்கு மாநாடு  டிசம்பரில் வருகிறது அதற்கும் சேர்த்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது, சொந்த மக்களை மறைத்து விட்டு விழா நடத்த நினைப்பது ஆள்பவர்களுக்கு புதிதல்ல. இதற்குமுன் சில தலைவர்கள் வந்த போதும் இதுபோல் நடந்துள்ளது மேலும், 2010ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதும் டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர், அங்கிருந்த சேரி பகுதிகள் அழிக்கப்பட்டன. ஊழல் கூத்தடிக்கும் இடத்தில் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடம் இல்லாமல் இருப்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. ஒருவேளை தூய்மை இந்தியா என்றால் இதுதானோ?  

- கமல்குமார் 

சார்ந்த செய்திகள்