Skip to main content

கொடி நாளின் கதை!

Published on 07/12/2017 | Edited on 07/12/2017
கொடி நாளின் கதை! 

லைசென்ஸ் வாங்கும்போது கொடுக்கும் நிதி இங்கே  செல்கிறது...  





கொடி நாள் நிதி அதிகமாக வழங்கியிருப்பதற்காக  தமிழகத்தை   ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாராட்டியிருக்கிறார்.   வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO)  வாகன உரிமம் பெறச் செல்லும் பொழுது 'கொடி நாள் நிதி' என்று ஒன்று வசூலிக்கப்படுமே, அந்த கொடி நாள்  இன்று தான் (07 டிசம்பர்). முதல் முதலில் 1949 ஆம் ஆண்டு  டிசம்பர் 7 ஆம் தேதி கொடி நாளாகக்  கொண்டப்பட்டது. அன்று  முதல்  இந்தியா முழுவதும் படை வீரர் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

  நாட்டிற்காக  தன்  உடல் உறுப்புகளையும்  உயிரையும்  தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காகவும் மறுவாழ்விற்காகவும் நிதி திரட்டப்பட்டு  முன்னாள் வீரர்களின் நலனுக்காகவும் இந்நாளில் வழங்கப்படும். படை வீரர் கொடியினை மக்களிடம் விற்பனை செய்து அதிலிருந்து வரும் நிதியையும் நன்கொடைகளையும் திரட்டி அளிப்பதாக இந்த  கொடி நாள் கொண்டாடப்படுகிறது.  'துப்பாக்கி' படத்திலும் அவ்வப்போது செய்திகளிலும் நாம் பார்த்த  ராணுவ வீரர்களின் தியாகங்கள் இன்று நினைவுக்கு வருகின்றன.  ஆயிரக்கணக்கான வீரர்கள் செய்த தியாகத்தில்  மேஜர் சரவணன் மற்றும் கேப்டன் விக்ரம் பத்ரா ஆகிய இரண்டு பேரை பற்றி பார்ப்போம். 





தந்தையும்  மகனும்... 

தமிழகத்தில் திருச்சியை சேர்ந்தவர் மாரியப்பன் சரவணன் என்கிற மேஜர் சரவணன். இவர்  பணியில் சிறந்து விளங்கியதால் 1999 ஆம் ஆண்டு மேஜராக நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு  இந்தியா பாகிஸ்தானுக்கிடையில்  நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார்.  இறக்கும் போது எதிரிகளை  கொன்றுவிட்டுத்  தான் இறந்துள்ளார் மேஜர் சரவணன். அவரது உடலை பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து மீட்டதே பெரிய போராட்டமாக இருந்ததாம். சரவணனின் தந்தை மாரியப்பனும் ஒரு ராணுவ வீரர். குடும்பத்தின் ஒரே ஆண் மகனாக இருந்தும்  தன் வாழ்வை  நாட்டுக்காக கொடுத்த  சரவணனுக்கு  இந்திய அரசு 'வீர் சக்ரா விருது' அளித்துள்ளது. திருச்சியில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு முன்... 





ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் விக்ரம் பத்ரா. இவர் இந்திய இராணுவத்தில் ரைபிள் படை பிரிவிற்கு கேப்டனாக  பதவி வகித்தார். இவரும் கார்கில் போரில் தான் இறந்தார். போரின் போது பாகிஸ்தான் வீரர்களை நெருங்கிச்  சென்று தாக்குதல் நடத்திய போது 3 வீரர்களை கொன்று விட்டு தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இவர் இறக்கும் முன் இவர் தலைமையில் இரண்டு இடங்களை பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் மீட்டது. அதில் ஒரு இடத்திற்கு தற்போது 'பத்ரா டாப்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இதில் மனவேதனையான செய்தி என்னவென்றால் இறப்பிற்கு முன்பு காதலியுடன் திருமணம் முடிவாகியிருந்தது.

இந்த இரண்டு வீரர்களுமே இளமையிலேயே தங்கள் உயிரை நாட்டுக்காக கொடுத்துள்ளனர்.  அரசு அலுவலகங்களில் வழக்கமாக வாங்கும் படிகளோடு கொடுப்பதால்  கொடி நாள் நிதியை கோபமாக  பார்த்த நமக்கு, அதன் நோக்கம் தெரியும்பொழுது, எந்த நெருடலுமின்றி கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.   

ஹரிஹரசுதன்              

சார்ந்த செய்திகள்