Skip to main content

சமூகநீதியைக் காவு வாங்கும் மனுநீதி?!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

 

1990ஆம் ஆண்டுவரை இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், இந்தக் கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்ய 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய ஜனதா அரசு பி.பி.மண்டல் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷன் 1983 ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையை இந்திரா தலைமையிலான அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 52 சதவீதம் மக்கள் பிற்படு்ததப்பட்டோராக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீதம் வழங்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவு மொத்தமாக 49 சதவீதமாக இருக்கும்படியும் பரிந்துரை செய்தது.

 

இந்தப் பரிந்துரையை இந்திரா தலைமையிலான அரசு அமல்படுத்துவதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் வந்த ராஜிவ் அரசும் இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவதில் காலந்தாழ்த்தி வந்தது. இந்நிலையில்தான், 1989ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. அந்தச் சமயத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார் வி.பி.சிங். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட அந்த இடஒதுக்கீடு பரிந்துரைகள் இன்றுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாக சென்றுசேரவில்லை என்பதே நிஜம்.

Social

வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ஆகஸ்ட் 1990ல் அரசு அறிவிப்பு வெளியானது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மண்டல் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை மத்திய அரசு அமைச்சகங்களில் ஏ பிரிவு அதிகாரிகளாக 17 சதவீதம் பேரும், பி பிரிவில் 14 சதவீதம் பேரும், சி பிரிவில் 11 சதவீதம் பேரும், டி பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட உண்மைகளாகும். மத்திய அரசின் மையமாக இருக்கும் அமைச்சரவை செயலகத்தில் ஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை என்பது இன்னும் பெரிய கொடுமை.

 

பிற்படுத்தப்பட்டோரின் நிலைமை இப்படி இருக்க, உயர்சாதிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு மோடி அரசு தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பை அமல்படுத்திய வேகமும், முறையும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எனப்படும் முன்னேறிய வகுப்பினர் யார் என்று அரசு கூறியுள்ள விளக்கம் வேதனையைத்தான் ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு கொண்டோர் அனைவரும் ஏழைகள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.

Periyar

இந்த அடிப்படையிலான ஏழைகளுக்கு 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர்படிப்புகளில் இந்த ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார வரம்பு 72 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயர்சாதி ஏழைகள், வருமான வரி கட்டினாலும் ஏழைகள்தான் என்ற மோடி அரசாங்கத்தின் முடிவுக்கு பெயர்தான் மனுநீதி என்கிறார்கள்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுநீதி இப்போது மீண்டும் அமலாகத் தொடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான், காலங்காலமாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிலும் குறைவான கல்வித் தகுதியும், அதிகமான பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அடாவடியை மோடி அரசு அமலாக்கியுள்ளது.

 

இதன்மூலம் காலங்காலமாக அறிவில் சிறந்தோராக தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்களின் கல்வித் தரத்தை அரசாங்கமே அம்பலப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீடை பிச்சை என்று கேலி பேசியுள்ளனர் சில உயர்சாதியினர். இன்று  கல்வியில் பின்தங்கியோரைக் காட்டிலும் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பை பெறும் நிலைக்கு தயாராகி இருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேர்வு எழுதியோரில் வேலைக்கு தகுதியானோர் பெற வேண்டிய மதிப்பெண்கள் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாகியது. அதாவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்  குறைந்தபட்சம் 61.5 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினத்தோர் 53,75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வெறும் 28.5 மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தமிழகத்தில் இந்த நிலை என்றால், மேற்கு வங்கத்தில் சைபர் மதிப்பெண் எடுத்திருந்தாலும் வேலை என்ற கொடுமையான அறிவிப்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

postal

அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், அஞ்சலகத்துறை தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பணியைப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் நிலவரத்தை அறிந்தபோது உயர்சாதியினரின் கடந்தகால ஒடுக்குமுறை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிப்படையாகவே அறியமுடிந்தது. அதாவது, பொதுப்பிரிவினர் 95.2 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோர் 95 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்களும், பழங்குடியின மக்கள் 89.6 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும், செவித்திறன் குறைபாடுள்ளோர் 64.2, வேறு உடல்குறை உள்ளோர் 78.4, பார்வைக் குறை உள்ளோர் 85.8, கை, கால் முடக்கம் உள்ளோர் 88.8 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

sbi

கை, கால் முடக்கப்பட்டோரைவிட, பார்வைக் குறைபாடு உள்ளோரைவிட முன்னேறிய சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குள் வருமானமுள்ளவர்கள் முன்னுரிமை பெற்றிருந்தனர். இது அவமானகரமான நடவடிக்கை என்றாலும், இந்த நவீன காலத்திலேயே இப்படியென்றால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எப்படி இருந்திருக்குமென்ற கேள்வி உண்டாகிறது.

 

ஆம். ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் சமூகநீதி பலனை, ஒரே அறிவிப்பில் அறுவடை செய்ய முடியும் என்றால், அதன் பெயர்தான் மனுநீதி என்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் இன்னொரு சமூகநீதிப் போராட்டத்துக்கு தயார் செய்ய இந்த மனு அநீதி பயன்படும் என்றே சமூகநீதி போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக நீதியில் நாம் தமிழர் கட்சி

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

Naam tamizhar in Social Justice

 

இந்தியாவில் சாதி என்பது ஒன்றின்மீது ஒன்று பொருந்தி சிக்கலான இறுகிய அமைப்பாக உள்ளது என்கிறார் பொதுவுடைமை பிதாமகன் கார்ல்மார்க்ஸ் அவர்கள்.

 

மேற்கத்திய  நாடுகளில் சாதி என்பது வர்க்க அடிப்படையில் உள்ளது. பணம் உள்ளவன் உயர்ந்த சாதி. பணம் இல்லாதவன் தாழ்ந்த சாதி. ஆனால், இந்தியாவில் சாதி என்பது வர்க்க வேறுபாடு மட்டுமல்ல. தொழில், பொருளாதார, சமூக, பண்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகளை கொண்டு அதிலிருந்து வெளிவரவே முடியாதபடி மனிதர்களை சுற்றி பின்னிப் பிணைத்துள்ளது.

 

சூத்திரன் என்ற வடமொழி சொல்லுக்கு கடினமான வேலைகள் செய்து வாழ்வின் வறுமையை விரட்டுபவன் என்று பொருள் சொல்லப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி மனுநீதியை பொறுத்தவரை பெண்களை ஓட்டுமொத்தமாகவே சூத்திரர்களாகத்தான் சித்தரிக்கிறது. அதனால்தான் அவர்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது. 

 

கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக பங்கேற்பு, அரசியல் என்று எவற்றிலிருந்து யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ, அவர்களுக்கு அவற்றில் சிறப்பு வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வினை முற்று முழுதாக களைய முயலும் முயற்சிக்கு பெயர்தான் சமூக நீதி.

 

Naam tamizhar in Social Justice

 

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின்  மூத்த முதல் தொல்குடியான தமிழ்க்குடியில் சாதி என்பது இடை வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மன்னர்களை கரிகால் வளவன், பாண்டிய நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், அருண்மொழிச் சோழன், அரசேந்திரச் சோழன் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைக்க முடியாமல் இன்றளவும் தடுமாறிவருகின்றனர் சாதியவாதிகள். சாதி என்பது தமிழ்ச் சொல் இல்லை. சாதி பார்ப்பவன் தமிழனே இல்லை என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன்.

 

தமிழ் முன்னோர்கள் பலரும் பல்வேறு வழிகளில்  சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகநீதிக்கு இலக்கணம் வகுத்தது தமிழ்மறை. அதை அடியொற்றியே வள்ளலார், அயோத்திதாச பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்டோர் சனாதன கொடுமைக்களுக்கு எதிராக போராடினர். பிற்காலத்தில் பெரியாரும் அதற்காக  தீவிரமாக போராடினார். ஆனால் பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் தங்களது ஆட்சி அதிகார பதவிகளை காப்பதற்காக  பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதற்கு எதிராகவும் செயல்பட்டதன் விளைவு தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. 

 

கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழகத்தில் சமூகநீதி என்கிற சொல்தான் உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத்தர சரியான கவனம் செலுத்தவில்லை. சமூகத்தில் சாதாரண மக்களுக்கு  நடக்கின்ற அனைத்து தீமைகளுக்கும் தீர்வு காண்பதே உண்மையான சமூக நீதியாகும்.  இதை சாதி மறுப்பு, பெண் விடுதலை, இடஒதுக்கீடு என சுருக்கிவிட்டார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள். சுயமரியாதை என்று பேசிக்கொண்டு பதவிக்காக காலில் விழுவதும் குனிந்தே செல்வதும் திராவிட திருவாளர்களின் செயல்களாக நாம் பார்க்கிறோம்.

 

Naam tamizhar in Social Justice

 

சாதியை ஒழித்த கட்சிகள் எனக் கூறிக்கொண்டு சாதிய அமைப்புகளை உருவாக்கி அதைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்வதைப் பார்க்கிறோம். சனநாயகத் தேர்தலைப் பணநாயகத் தேர்தலாக மாற்றியது இந்த திராவிடக்கட்சிகளே. சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது, பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பது, பணத்தைக் கொடுத்து வாக்கை ஒரு பண்டமாக மாற்றியது, முதல் போட்டு இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி சாமானியர்கள் அரசியலில் நுழைய முடியாதவாறு பணமுதலைகளுக்கான இடமாக மாற்றி வைத்துள்ளார்கள். இதில் நாம் தமிழர் கட்சியின் சமூக நீதி செயல்பாடுகள் எப்படியுள்ளது எனப்பார்ப்போம்.

 

வெற்று முழக்கமாக உள்ள பெண்களுக்கான 33 விழுக்காட்டைக்கூட  திராவிடக் கட்சிகள் வழங்காத நிலையில் நாம் தமிழர் கட்சி இந்தியாவிலேயே முதல்முறையாக ஐம்பது விழுக்காடு என அறிவித்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளில்  20 இடங்களைக் கொடுத்தது. இப்போது நடக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் சரிபாதி 117 தொகுதிகளை படித்த இளம் பெண்களுக்கு ஒதுக்கி களமாட வைத்துள்ளது.

 

Naam tamizhar in Social Justice

 

பொதுத் தொகுதிகளில் ஒரு இடத்தைக்கூட பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்காத திராவிடக் கட்சிகள் சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். நாம் தமிழர் கட்சி பொதுத் தொகுதியில் 16 பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சாதி பார்த்து நீ வாக்களித்தால், உன் ஓட்டு எனக்கு தீட்டு என மேடையிலேயே அறிவிக்கிறார் சீமான். தமிழ்ச் சமூகத்தின் தொல்குடியான குறவர்கள், கோயில் பணி புரியும் பண்டாரங்கள், மண்பாண்ட தொழில் செய்யும் குயவர்கள், சலவைத் தொழில் செய்யும் வண்ணார்கள், மருத்துவ குடிகளான நாவிதர்கள், ஆசாரிகள் என காலகாலமாக திராவிடக் கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத தமிழ்க் குடிகளைத் தேடிப்பிடித்து அவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கச்செய்ய வேட்பாளராக நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் நிறுத்தியுள்ளது.

 

ஐந்நூறு, ஆயிரம் என்று உதவித்தொகைகளுக்குக் கையேந்த வைக்கும் நிலையை மாற்றி அவர்களுக்கான உரிமைகளைப் பெறச்செய்வதே உண்மையான பெண்கள் முன்னேற்றமாக இருக்க முடியும். அதிலும் சமூகம், பொருளாதாரம் என அனைத்து உரிமைகளையும் வழங்கும் அதிகார மையங்களான சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் அவர்களுக்கான சமவாய்ப்பைப் பெறச் செய்வதன் மூலம் தங்களுக்கான அனைத்து உரிமைகளையும் தாங்களே திட்டமிடவும், சட்டமிடவும் முடியும் என்பதால் நாம் தமிழர் கட்சி அத்தகைய மாற்றத்தை இந்த மண்ணில் சாத்தியப்படுத்த முனைகிறது.

 

தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்ந்து கிடப்பது கல்வி என்றால் இடஒதுக்கீடு மூலம் அதனைக் கொடுத்து விடலாம். பொருளாதாரத்தை வேலைவாய்ப்பின் மூலம் பெற்றுவிடலாம். ஆனால் அவர்கள் உண்மையாக வீழ்ந்துகிடப்பது உயர் சாதி எனச் சொல்லப்படுவோரின் மனங்களில். எனவே அங்கேயிருந்து அவர்களை உயர்த்தும் உன்னத நோக்கத்தோடு தான் பொதுத்தொகுதியில் அதிக அளவில் ஆதித்தமிழர் என்ற புதிய புரட்சிகர வரலாற்றை நாம் தமிழர் படைத்துள்ளது.

 

ஆகவே நாம் தமிழர் கட்சியின் சமூகநீதி என்பது ஆண்டாண்டு காலமாய் அடிமைபடுத்தபட்டிருக்கும் மக்களை, சலுகைகள் என்ற பெயரில்  வெறும் வாக்குவங்கிகளாக மட்டுமே  பயன்படுத்தும் திராவிடக் கட்சிகளை போல் அல்லாது, அவர்கள் ஒடுக்கப்படுவதற்கான  உண்மையான காரணங்களான  சமூக சிக்கல்களின் வேர்களை கண்டறிந்து அதனை களைய முயலும் நேர்மையான செயல்பாடாகும்.  நாம் தமிழரின் தமிழ்த்தேசிய அரசியல் அதனை உறுதியாக இந்த மண்ணில் சாதிக்கும்.

 

 


 

Next Story

கரோனோ எதிரொலி - திருமணத்தில் பன்னீருக்கு பதில் ஹேண்ட் வாஷ் (படங்கள்)

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. 
 

இதன் ஒரு நடவடிக்கையாக,  நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  
 

Hand Wash in marriage


 

மக்கள் ஊரடங்கையடுத்து இன்று தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. திருச்சியில் மத்தியபேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.  

பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதால் திருச்சி மாநகர் முழுவதும் வெறிச்சோடிக்கிடக்கிறது. 

சுயஊரடங்கு நடைபெறும் இன்று முகூர்த்த தினம் என்பதால் நிறைய திருமணங்கள் திருச்சியில் நடைபெற இருந்த நிலையில் இன்று 12 திருமணங்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மலேசியாவில் இருந்து மணமகன் வர முடியாத நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 

 

Hand Wash in marriage



இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் திருச்சியில் சில திருமணங்கள் அதிகாலையிலே நடைபெற்றது. குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று அதிகாலையிலே 4.30 மணிக்கு ஆரம்பித்து காலை 7.00 வரை நடைபெற்றது.   
 

இந்த மண்டபம் 1500 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடிய பிரமாண்ட இந்த மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு 100 க்கு குறைவானவர்களே கலந்து கொண்டனர். 
 

திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்பதற்கு சந்தனம், பன்னீர் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கே திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் உள்ளே நுழையும் இடத்தில் கை கழுவும் ஆயில் ஹேண்ட் வாஷ், சோப்பு ஆயில் கொடுத்து கழுவிய பின்னரே திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.