Skip to main content

ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!

Published on 16/10/2017 | Edited on 16/10/2017


இங்கிலீஷ் கலந்து பேசும் தமிழ் மண்ணின் மைந்தன்.  சப்பாணிகளுக்கும் மயில்களுக்கும் திரையில் இடம் பிடித்துக் கொடுத்தவர். முதல் மரியாதையும் செய்யத் தெரியும், சிகப்பு ரோஜாக்களும் செய்யத்தெரியும் இரு துருவப் படைப்பாளி.   ரஜினி, கமலை அழைத்து விழாவும் நடத்துவார். அவர்களின் அரசியலை விமர்சனமும் செய்வார்... வயதுகளைத் தாண்டி படைப்புகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவுடன், சினிமா, அரசியல், மொழி, எல்லாம் பேசினோம்...

தமிழ் சினிமாவின் இரும்புக்  கதவுகளை திறந்து வச்சது நீங்க... கிராமத்தின் எதார்த்த மனிதர்களை, திரையில் பிரம்மாண்டமாக அடையாளப்படுத்தியவர்  நீங்க...  உங்கள் பார்வையில் இன்றைய சினிமா எப்படி  இருக்கிறது?
 
இரும்புக்  கோட்டைய நான் திறந்தேனு இல்ல, எனக்கு முன்னாடியே திறந்துட்டு வந்தாங்க, அன்னைக்கு இருந்த காலகட்டத்துல ஒரு சாமானியனும்  உள்ள வரலாம் அப்டிங்குறதுக்கு, நான் உதாரணமா இருந்தேன். பெரிய அகாடெமிக்  குவாலிஃபிகேஷன் கிடையாது... சாதாரண விவசாய குடும்பத்துல பிறந்த ஆளு, எந்த பின்னணியும் இல்லாம வந்து உள்ள நொழைஞ்சுட்டானே, அது சக்ஸஸ் ஆச்சு. சோ (so)  சிலருக்கு  அது முன்னுதாரணமா இருந்து எல்லாரும் உள்ள வரும்போது நான் ஒடச்சேன், ஓடச்சேனு  சொல்றாங்க. இது டிஜிட்டல் காலம், உலகம் ரொம்ப சுருங்கிருச்சு எல்லாத்தையும் கைல வச்சுருக்கான், எத கேட்டாலும் மூணு நிமிஷத்துல சொல்லுறான். அர்ஜென்டினால ஒரு கம்பெனி பேர் கேட்டா சொல்றான், இப்போ லேட்டஸ்டா ஒரு  படம் ஹாலிவுட்ல வந்துருக்காமே அது என்னனு  கேட்டா, உடனே தட்டி பாத்து சார்  ஃபெயிலியர், சக்சஸ்னு சொல்றான். எல்லாமே கைல இருக்கு.  நாங்கல்லாம் தேடிப்போய்தான் படம் பாப்போம், டெல்லி போயி ஒரு நல்ல ஃபெஸ்டிவல் போயி ஒரு நல்லபடம்  பாக்கணும்ங்குறது எல்லாமே இப்போ கைலயே  இருக்கு, உலகம் சுருங்கிருச்சு. அதனால இவன் உலக சினிமாக்களோட போட்டி போடணும்.  இப்போ  ஒலிம்பிக்கு  தங்கப்பதக்கம் வாங்குற மாதிரி  தமிழ்  சினிமாவுலயும் நல்லா வாங்கிட்டு வந்தாங்கனு சொல்ற மாதிரி படம் பிரிப்பர் பண்ணனும். அந்த சூழ்நிலை இங்க வரணும்.






சமூக மரபுகளை உடைக்கிற பல விஷயங்களை உங்கப்படம் பேசியிருக்கு. மதங்களை தூக்கி எரியுற 'அலைகள் ஓய்வதில்லை' க்ளைமேக்ஸ் காட்சியே அதற்கு சாட்சி. நிகழ்கால சினிமாவுல இப்படியான விஷயங்கள்  பேச முடியும்னு நினைக்கிறீர்களா?
                                            
நான் பேசிய காலங்கள்ங்குறது வேற... அலைகள் ஓய்வதில்லை நான் இப்போ எடுக்க முடியாது. ஒருவேள அலைகள் ஓய்வதில்லை படம் இப்போ எடுத்திருந்த மிகப்பெரிய பிரச்சனை கிளம்பியிருக்கும், வேதம் புதிது இப்போ நான் எடுத்திருந்தால் 'தேவர்ங்குறது நீ படுச்சு வாங்குன பட்டமா?'னு  இப்ப எடுக்கமுடியாது. 'ஜாதிய ஒழிக்கணும், ஜாதிய ஒழிக்கணும்'னு  சொல்லி மதசார்பற்ற நாடுனு பேசிட்டு, இன்னும் மதத்த அதிகமா வளத்து, ஜாதிய வளத்துட்டு இருக்கோம். அலைகள் ஓய்வதில்லை இப்போ எடுத்தா  எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு வருவாங்க. இன்னைக்கு நான் பூணூல் அறுத்திருந்தா, கிராஸ் அறுத்திருந்தா  என்ன ஆகும்? மைக்க நீங்க கொண்டு போயிருப்பிங்க.. 'அவர் பூணூல் அறுத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள், கிராஸ் அறுத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' அப்டினு கேப்பிங்க. அவன் அதுக்கு எதாவது சொல்லுவான். பெரிய பிரச்சனை வரும். 

இயக்குனர்கள்தான் கதாநாயகர்களை உருவாக்குறீங்க... ஆனால், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு சினிமாவை பயன்படுத்துறாங்க. இயக்குனர்கள் நடிகர்களை விட அரசியல் தலைவர்களை உருவாக்கிக்கிட்டே இருக்காங்களே?
                                            
வரும்போது சினிமாவை நம்பி மட்டும்தான் வர்றாங்க.  உங்க கைத்தட்டு போதை ஏறி,ஏறி  'ஓஹோ மக்களெல்லாம் நம்ம பக்கம் நிக்கிறாங்க போல'னு நினைச்சுக்கிறான்.  கட்டவுட்டுக்கு பால் ஊத்துறீங்க, கோவில் கட்டுறீங்க.  இதெல்லாம் அக்கிரமம்... வேற எந்த நாட்டுலயாவது உண்டா? ஆந்திராவுலயும், தமிழ்நாட்டுலயும் மட்டும்தான் கேவலமா இருக்கு, வேற எந்த ஸ்டேட்லயும் இல்ல. அந்த காலத்துல எம்.ஜி.ஆரையே அட்டக்கத்தினுதான் சொல்லுவோம். அவர் புலிக்கூட சண்டை போடுறத,  'காகிதப் புலியுடன் சண்டை'னு  தமிழ்வாணன் எழுதியிருப்பாரு கல்கண்டுல. அது பெரிய பிரச்சனை ஆச்சு அப்ப. இப்படியே ஹீரோவை எல்லாம் வல்ல சக்தின்னு நெனைக்க வச்சு, அவன் அரசியலுக்கு வரும்போது, கொண்டாடுங்கன்னு நம்புவான். யாரு கொண்டாடுவா, ரசிகன் மட்டும்தான். மக்கள் யோசிப்பான்...





அட்டக்கத்தினு சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். தான தமிழகத்துல தொடர்ந்து ஆட்சியை பிடிச்சாரு?
                                             
அன்னைக்கு இவ்ளோ விழிப்புணர்ச்சி இல்ல. இன்னைக்கு நமக்கு இவ்ளோ விழிப்புணர்ச்சி இருந்தே நாம இப்போ இப்படித்தான் இருக்கோம். அதுவுமில்லாம  தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர் நல்ல மனுஷன். He loves people. அவர் மேடை போட்டு  தையல் மெஷின்லாம் கொடுக்கல. அவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படப்பிடிப்பு தளத்துலயே  யாராவது வேடிக்கை  பாக்க வந்தாங்கனா, அந்த கிராமத்துக்கு போயி ஆயிரம் சேலைகள்  வாங்கிக்குடுத்துட்டு வந்துருவாரு. 'இவுங்கள்ட்ட இருந்து வந்த காசு இவுங்கள்ட்டயே போகட்டும்' அப்டின்னுவாரு. அந்த மனிதாபிமானம் வார்த்த இருந்துச்சு, அவரோட பொலிடிகல் பாலிசி வேற.

எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா அவுங்களோட நெருங்கி பழகியவர் நீங்க தமிழக அரசியல்ல இப்போ ஒரு  வெற்றிடம் இருக்குனு நெனைக்குறிங்களா?
                                               
இங்க குழப்பமான சூழ்நிலைதான் இருக்கு, வெற்றிடம் இல்ல. நெறைய இருக்காங்க, ஒரு நூறு தலைவர்கள் இருக்காங்க ஒரு நூறு சி.எம். வரப்போறாங்க, (சிரிக்கிறார்). மியூசிக்கல் சேர் மாறி ஏதோ பாவம் அந்த ஷேர் ஒன்னு உக்காந்துருக்கு. எல்லாரும் ஓடிட்டு இருக்காங்க 'தகா,தகா,தகா'னு , அதுல முள் இருக்கா, இல்லையானு தெரியல உனக்கு. அது ஒன்னும் சாதாரண இது இல்ல, அது கஷ்டம் சார். வேணாம் இத பத்தி பேசாதீங்க கோவம் வரும் எனக்கு.

ரஜினி, கமல், இந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக்க நினைக்குறாங்கனு சொல்லலாமா?
                                               
நீங்க சும்மா இல்லாம தூங்குற ஆள எழுப்பி விட்டுட்டீங்க.  'எப்போ வருவீங்க, எப்போ வருவீங்க'ன்னு கேட்டு...

முழுக்க, முழுக்க மீடியாவை மட்டும் தான் காரணமா?
                                                  
நீங்கதானே கொண்டுபோய் விடறீங்க... எனக்கு யார் சொல்லித்தர்றா?  நீங்கதான் ஜனங்களுக்கு சொல்லித்தறிங்க. ரசிகன்,  இத ஒரு முக்கியமான விஷயம்னு நெனச்சு 'எதிர்காலத்துல அவர் வரமாட்டாரா'ன்னு இவன் உக்காந்துருக்கான் மந்திரியாயிரலாம்னு. ரஜினி, கிட்டத்தட்ட ஒரு இருபது  வருஷமா பேசிட்டு இருக்கார்.  அவரு என் பெஸ்ட் ஃபிரண்டு, ரொம்ப நல்ல மனுஷன். அவரைக் கெடுத்ததே நீங்கதான். யுத்தம் வரும்போது வரலாம்னு சொல்லிட்டாரு அவர்பாட்டுக்கு சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு.






ரஜினிக்கோ, கமலுக்கோ மக்கள் செல்வாக்கு இல்லனு சொல்லமுடியுமா என்ன?
                                                    
என்  இன்ஸ்டிடியூட தெறந்து வச்சாங்க  ரெண்டு பேரும். எவ்ளோ பெருந்தன்மையா வந்து மூனு மணிநேரத்துக்கும் மேல இருந்தாங்க. ஏன்னா,   என் பெஸ்ட் ஃபிரன்ட்ஸ். அப்படி  இருந்துட்டு போனவரு அரசியலுக்கு பிரவேசத்துக்கு   நான்தான் கமெண்ட் அடிச்சேன். இன்னைக்கு அவரும் அதையே  சொல்றாருல? 'பாப்புலாரிட்டிய நம்பி மட்டும் அரசியலுக்கு வரமுடியாது'னு. நான் அன்னைக்கு சொன்னப்ப 'என்ன பாரதிராஜா இப்டி சொல்லிட்டாரு'னு சொன்னாங்க இப்போ அதேதான ரஜினியும் சொல்றாரு. பாப்புலாரிட்டி மட்டும்தான் வேணும்னா நடிகர் திலகம் சிவாஜி
கணேசன் இந்த நாட்டுல முதலமைச்சர்  ஆகிருக்கணும், இந்த நாட்டுல, இந்த நூற்றாண்டுல தமிழ்ல அவனுக்கு இணையான ஒரு கலைஞன் கிடையாது. அப்படிபட்டவர் கட்சி ஆரம்பிச்சாரு... சொந்த மண்ணுல அவரால ஜெயிக்க முடியல.  அதப்பத்தி பேசக்கூடாது.

ரஜினியோ, கமலோ அரசியலுக்கு வரும்போது யார் தமிழர்னு கேள்வி வருதே?
                                                           
அது 100% வரும் சார், வந்தே ஆகணும். நான் சொல்லுவேன். யார் வேணும்னாலும் வாங்க அரசியல் பண்ணுங்க, நல்லா  சம்பாதிங்க,  சந்தோசமா இருங்க. தலைமைப் பொறுப்புக்கு தமிழன் மட்டும்தான் வரணும். இல்லனா,  சும்மா கூட  குரல் எழுப்ப முடியாது, கர்நாடகாவுல. கர்நாடகாவுல இருக்குற தமிழனாலேயே தமிழனுக்கு சாதகமா பேசமுடியாது. அந்த மாதிரி  நீங்க இலங்கை பிரச்சனைல குரல் கொடுங்க. தமிழன் செத்துட்டு  இருக்கானு  எப்போவாது கொடுத்துருக்கீங்களா? ஆகையினால் தமிழன் மட்டும்தான் வரணும். குறுகிய வட்டத்துல பாரதிராஜா பேசுறான்னு வரும். ஏன் இதே உணர்வு  ஆந்திராவுல இல்லையா? கர்நாடகாவுல இல்லையா? மராட்டில இல்லையா?

சசிகலாவை மேடைல தமிழச்சினு சொல்லி பாராட்டி பேசுனீங்க?

(குறுக்கிட்டு) சொன்னேன். தமிழனா, ரொம்ப காலங்களுக்கு பின்னால் ஒரு தமிழச்சி வருவதில்  சந்தோஷப்பட்டேன்.  மேடையிலேயே சொன்னேன்.







அதிகாரத்துக்கு வருபவர்கள்  தமிழர்களாக  இருந்தால்  மட்டும் போதுமா? குற்றவாளியாக  இருந்தாலும் பரவாயில்லையா?

குற்றவாளின்னு இன்னைக்கு நீ பேசுற... நான் உன்ன விரல் நீட்டி சொல்றேன், நல்ல தமிழன்னு சொன்னேன்... உன் முகத்தைப் பார்த்து சொன்னேன். முதுகுப் பக்கம் இருந்தது,  எனக்கு தெரியல. அவன் பாத்து சொல்லிட்டான். நான் என்ன பண்ணுவேன்?  உன்னை நேரடியாக பார்க்கும்போது, உன் திறமை தெரிகிறது உன் பின்பகுதி எனக்கு தெரியல... சார் உங்களுக்கு தெரியாதுன்னு முதுகை திருப்பிகாட்டுறான். நான் என்ன பண்ணுவேன்? 

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கலாம்னு சட்டம் கொண்டுவந்து கேரளாவில் தலித்துகளையும் அர்ச்சகராக்கிருக்காங்க.. தமிழ்நாட்ல கம்யூனிஸ்டுகள் இத தவற விட்டாங்கனு சொல்லலாமா?

தவற விட்டாங்கனு சொல்ல முடியாது சார். அவுங்க கலையை முன்னெடுக்கல... சினிமாவை, நாடகத்தை  கையிலெடுக்கல...  ஜீவா வந்த பின்னாடி 1962 ல தான்  கொஞ்சம் யோசிச்சாங்க. அதுவரைக்கும்  சினிமாவைப் பத்தி பேசத்  தெரியாது . பொருளாதாரத்தைப்  பத்தி அடுக்கடுக்கா
பேசுவாங்களே தவிர, அடுக்கு மொழில பேசத்தெரியாது. 'அர்ஜென்டினால பொருளாதாரம் இப்டி இருக்கு, அமெரிக்காவுல பொருளாதாரம் இப்டி இருக்கு, இங்க  இப்டி இருக்கு'னுதான் பேசுவாங்க. ஆனா இவன் 'அர்ஜென்டினாவிலே இருந்து அரிசியை இறக்குமதி செய்வோம்'னு சொல்லுவான்.  அதுக்கு இவன் கை தட்டுவான். அர்ஜென்டினால அரிசி கிடையாதுன்னு தெரியுமா? 'செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே என்றாவது எங்கள் கோடி பறக்கும்னும்'னு சொல்லுவான்.  ஆனா அங்க தேசியக்கொடிய தவிர வேற ஏதும் பறக்காதுனு இவனுக்கு தெரியாது.  அதுக்கும் இவன் கை தட்டுவான். பாவம் சார் இவன். இப்படி  கம்யூனிஸ்ட் ஆளுங்களுக்கு ஏமாத்த தெரியாது. நல்லகண்ணு மாறி ஆளுங்களுக்கெல்லாம் கஷ்டம் சார்.




'ஓல்டு  மேன்'




இன்றைய இயக்குனர்கள்ல உங்கள அசர வச்ச இயக்குனர்கள் யாராவது இருக்காங்களா?

அது ஒரு பத்து டைரெக்டர்கள் இருக்காங்க சூப்பரா இருக்காங்க. பத்தையும் நியாபகப்படுத்தி சொல்ல முடியாது,   ஒருத்தன சொல்லி ஒருத்தன சொல்லலைனா அவன் கோச்சுக்குவான். அதுலயும் ஒரு அஞ்சு, ஆறு பேரு பெஸ்ட். ரிலீஸ் ஆகாத படம் கூட பாத்துட்டேன். வண்டர்ஃபுல் டெக்னீசியன்ஸ்.. நல்லா சிந்திக்குறாங்க, எப்டித்தான்னு தெரியல, போன் பண்ணி பொறாமையா இருக்குடானு சொல்லுவேன்.

'குற்றப்பரம்பரை' படத்தின்  தயாரிப்பு  இப்போ எந்த கட்டத்துல  இருக்கு?

இல்ல.. இப்போ நான் 'ஓல்டு மேன்'னு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  முடியும்தருவாய்ல இருக்கு. அடுத்து  'செல்லாக்காசு', 'செலினா'னு  ரெண்டு  படம்   பண்றேன். இது  மூணும் வேற வேற ஜானர். 'செல்லாக்காசு' பணமதிப்பிழப்பு பத்தி வரும். 'ஓல்டு  மேன்' ஒரு வித்தியாசமான படம். பாரதிராஜாட்ட அப்படியொரு படம் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி  ஒரு படம். இந்த மூனையும் முடிச்சவுடன் என் வாழ்க்கை வரலாற ஒரு புத்தகமா எழுதிட்டு இருக்கேன். அத கொஞ்சம் முடிச்சுட்டு, 'குற்றப்பரம்பரை' பண்ண   அல்டிமேட்டா 25 கோடி வேணும். பாரதிராஜாவோட லிமிட் அஞ்சு கோடி, ஆறுகோடி இப்போ. சோ, பாரதிராஜாக்கு 26 கோடி குடுக்க எவனாவது தயாரா இருந்தா பாக்கலாம்...

சந்திப்பு : ஃபெலிக்ஸ்
தொகுப்பு : கமல்குமார்

சார்ந்த செய்திகள்