Skip to main content

ஜாபர் சாதிக்கிடம் விசாரணை; உள்ளே வந்த அமலாக்கத்துறை - இறுகும் பிடி!

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
delhi court  allows Enforcement Department to investigate Zafar Sadiq

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்களை பதிவு செய்துகொண்டனர்.

இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்தது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் சிறைக்குள் லேப்டாப் உள்ளிட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், ஜாபர் சாதிக்கு உள்ளிட்ட 5 பேரிடம் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது அமலாகக்துறையும் உள்ளே வந்திருப்பது விசாரணையை விரிவடைய செய்துள்ளது.

சார்ந்த செய்திகள்