Skip to main content

ரஜினியை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

Published on 31/12/2017 | Edited on 01/01/2018
ரஜினியை இவர்கள் ஏன்  எதிர்க்கிறார்கள்? 

காரணங்களும் நியாயங்களும்... 




எதிர்க்கலாம்... ஆதரிக்கலாம்...  ஆனால், புறக்கணிக்கமுடியாது. முன்பு தமிழக அரசியலில் கலைஞரைப் பற்றி இப்படி கூறுவார்கள். இப்பொழுது, ரஜினியின் அரசியல் அறிவிப்பை  இப்படித்தான் கூற முடியும். அந்த அளவுக்கு, இன்று காலை அவர் அறிவித்த 'ஆன்மீக  அரசியல்'  எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும்  பெற்று வருகிறது. நிகழும் முன்பே  அவரது அரசியல் வரவை அதிகம் விமர்சித்தவர்கள்   இருவர். ஒருவர், கடந்த தேர்தலில்  பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட  அன்புமணி ராமதாஸ், இன்னொருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆதரிப்பவர்களும் 'வர்லாம் வா' என்பவர்களும்  ஏற்கனவே அரசுகளில் அங்கமாய் இருந்தவர்கள், பதவிகளைப் பார்த்தவர்கள். எதிர்ப்பவர்களோ எதிர்காலத்தை நோக்கி நிற்பவர்கள்; ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் அல்லது  பிரித்துக்  கொள்ள   வேண்டும் என்று போராடுபவர்கள்; எங்கே ரஜினி இறங்கினால், இத்தனை வருட உழைப்பும் மக்களின் கவனமும் சிதறி விடுமோ  என்று பதறுபவர்கள்.  

ரஜினியை எதிர்க்க  பல காரணங்களைக்  கூறுகிறார்கள். தமிழரில்லை என்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்து ரஜினி வாயசைத்த பாடல் அல்ல... அவரே கடந்த மே மாத  ரசிகர் சந்திப்பின் போது  உள்ளத்திலிருந்து  உதிர்த்த சொல்... "என் வாழ்வின் பெரும்பகுதி தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறேன், உங்கள் அன்பால் என்னை நீங்கள் தமிழராக்கிவிட்டீர்கள்" என்கிறார். காவிரி பிரச்சனை வந்தாலும், ஈழப் பிரச்சனை வந்தாலும், ஒக்கேனக்கல் பிரச்சனை வந்தாலும் ரஜினிக்குப் பிரச்சனை தான். அவர் என்ன சொல்கிறார் என்றே கவனித்தார்கள். அவரும்   தமிழனாகவே  நடந்திருக்கிறார், தன் குரலை பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சனையின் போதும், தமிழனாய் நடப்பதை விட தமிழனென்று நிரூபிக்க வேண்டிய சங்கடத்துக்கும் அவர் ஆளாகியிருக்கிறார்.  


 

அவருக்கென அரசியல் தத்துவமில்லை என்றார்கள். இப்பொழுது ஆன்மீக அரசியல் என்று அவர் சொல்லும்பொழுது  பலரும் சிரிக்கிறார்கள். பலரும் இன்று பேசும்   தத்துவங்களும் கோட்பாடுகளும்  பல முறை தடுமாறியிருக்கின்றன . சந்தர்ப்பங்களுக்கேற்ப சாய்ந்து கொடுத்திருக்கின்றன.  ஆளும்கட்சி... ஆண்ட கட்சி எதிலும் ஊழல் இல்லாத  ஒருவரைப் பார்ப்பது நமக்கு  அரிய காட்சி... இந்த நிலையில், 'பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை, பிற மாநிலங்கள் நம்மைப் பார்த்து சிரிக்கின்றன,   அரசியலை வைத்து சம்பாரிக்க நினைத்தால் அருகில் வராதே' என்று கூறுகிறார். 'என்னை வாழ வைத்தவர்கள் நன்றாய் வாழவேண்டாமா' என்று கேட்கிறார். கொள்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு செயலாற்றாமல் இருப்பதும் நடக்கிறது.

அறிவித்த ஒரு கோடியை தரவில்லை என்றார்கள்.  நதிநீரை இணைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு கோடி தருவதாய் அறிவித்தார், அவரால் முடிந்த ஒரு அடியை எடுத்து வைத்தார். அடுத்த அடியை  அதிகாரம் கொண்ட அரசுகள் எதுவும் எடுக்காத  போது அரிதாரம் பூசும் நடிகர் என்ன செய்ய முடியும்? நிலையான முடிவை எடுப்பவரில்லை என்கிறார்கள். முன்னும் பின்னும் நடப்பதை அறியாதவரல்ல ரஜினி. தக்க நேரத்துக்காக காத்திருந்தவர் இப்பொழுது வாய் திறந்திருக்கிறார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் பலர் இருந்திருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் மனதை வெல்ல வல்ல தலைவர்கள் சிலரே. தமிழக அரசியலில் முகங்களின் பங்கு முக்கியமானது. ஒரு நடிகராக எம்.ஜி.ஆருக்குப் பின் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர்  ரஜினிகாந்த். ஒரு தலைவராகவும் அதற்கான வாய்ப்பிருப்பதைக்  காட்டியது  96 தேர்தலில் எதிரொலித்த அவரின் குரல். 




  ஜெயலலிதாவுக்குத் துணையாய்  காலமெல்லாம்  உடன் இருந்ததைத் தகுதியாகக் கொண்டு சசிகலா அரசியலுக்கு வரலாம்  என்றால், நம்பி வர லட்சக்கணக்கில் தொண்டர்கள்  இருக்கும்  ரஜினி தாராளமாக வரலாம்.  அவரது உறவினராக இருந்து பதவி பெற்று, பின் ஒதுக்கப்பட்டு, பல ஆண்டுகள் அமைதியாக இருந்த தினகரானால் ஆர்.கே.நகரில் நின்று வெல்ல முடிகிறது என்னும் பொழுது, ரஜினியை முழுமையாக எதிர்ப்பது மட்டும் சரியா என்ற கேள்வி எழுகிறது. தமிழரில்லை என்ற காரணத்துக்கு பதிலை மக்கள் தர வேண்டும். தமிழர்   என்பது பிறப்பிலா உணர்விலா என்பதை மக்கள் தான்  முடிவு செய்ய வேண்டும். தாங்கள் நம்பப் போவது நடிகரையா வேறு தலைவரையா என்பதையும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

இருக்கும் தலைவர்கள் எவரையும் குற்றம் சொல்லவில்லை அவர் . ஸ்டாலின், அன்புமணி, திருமா, சீமான் என அனைவரின் பலத்தையும் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறை அரசியலுக்கு தேவையானது தான்.   களம் காணும் போதே  கதவுகளை அடைப்பது சரியல்ல. ஜனநாயகத்தில் அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்கு  தேவைப்படும் அடிப்படைக்  கட்டமைப்பும் இவரிடம் உண்டு. இப்பொழுது கேள்வியாக இருப்பது இரண்டு விஷயங்கள் தான். அரசியலுக்குள் வர ஏற்பட்ட  இத்தனை வருட தாமதம் செயல்பாடுகளில்  இனியும்  இருக்குமா? ஜாதி, மதம் தாண்டிய ஆன்மீக அரசியல் என்கிறார், அது எந்த வகை அரசியல்? இதற்கு ரஜினி பதில் சொல்லிவிட்டால், மக்களும் ரஜினிக்கு பதில் சொல்லுவார்கள்.

வசந்த்   

சார்ந்த செய்திகள்