Skip to main content

போயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

jj


ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் தீபக்கையும் மகள் தீபாவையும் அறிவித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதனால், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் அவசரச் சட்டம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
 


வாரிசுகள் அடையாளப் படுத்தப்பட்டிருப்பதால் ஜெ.வின் சொத்துகள் என்னவாகும்? அ.தி.மு.க.வினரின் ’ஆலயமாக’ இருந்த போயஸ்கார்டன் பங்களா தீபா வசமாகிறதா? ஜெ.வுடன் 35 ஆண்டு காலம் அதே பங்களாவில் வசித்த சசிகலாவின் மனநிலை என்ன? என்கிற கேள்விகள் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாடி ’வளர்ப்பு மகன்’சுதாகரன் வழக்கு போடவிருப்பதாக மன்னார்குடி வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவரும் அ.ம.மு.க.விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்ட வழக்கறிஞர் பெங்களூரு புகழேந்தி. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் இணைந்துகொண்டதோடு ஜெ.வின் சொத்துக்களுக்கும் சொந்தம் கொண்டாடினர்.
 

jj


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்றும் அவசர சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்திருந்த நிலையில், இந்த வழக்கில் 27ஆம் தேதி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ், "அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்பதற்காக ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. அவர்களது மனு நிராகரிக்கப்படுகிறது. முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமாகவே போயஸ்கார்டன் வீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற அரசு பரிசீலிக்க பரிந்துரைக்கிறோம். நினைவில்லமாக மாற்றுவதில் அரசு உறுதியாக இருந்தால் இல்லத்தின் ஒரு பகுதியை மாற்றலாம். மீதி பகுதியை முதல்வர் இல்லமாக மாற்றலாம். ஜெயலலிதாவுக்கு திருமணமாகாததால், அவரது சகோதரரின் குழந்தைகளான தீபக், தீபா இருவரும் வாரிசுரிமை சட்டப்படி இரண்டாம் நிலை வாரிசுதாரர்களாக அவர்களே இருக்கின்றனர். அவர்களுக்குத்தான் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை உண்டு''  என உத்தரவிட்டனர். (சில நாட்களுக்கு முன்பு அந்தத் தீர்ப்பைத் திருத்தி நேரடி வாரிசாக தீபக்கும், தீபாவும் அறிவிக்கப்பட்டனர்)
 

jj


நீதிமன்ற உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடனடியாகத் தெரிவித்திருந்தார் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண். உத்தரவின் தன்மை குறித்து அவரிடம் விவாதித்த எடப்பாடி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைத் தொடர்பு கொண்டும் ஆலோசித்துள்ளார்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "நீதிமன்றத்தின் உத்தரவுகள் குழப்பமாக இருக்கிறது. நினைவில்லமாக மாற்றலாம் அல்லது மாற்றக்கூடாது என தீர்க்கமாகச் சொல்வதற்குப் பதில், ஒரு பகுதியை நினைவில்லமாகவும், மற்ற பகுதிகளை முதல்வரின் இல்லமாகவும் மாற்றுங்கள் எனச் சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. முதல்வர் இல்லமாக, அலுவலகமாக மாற்றினால் ஒரு வேளை ஆட்சி மாறுகிறபோது அப்போதையை ஆட்சியாளர்கள் இந்த பங்களாவை முதல்வர் இல்லமாக பயன்படுத்துவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

தவிர, ஒரு பகுதியை நினைவில்லமாகவும், மறு பகுதியை முதல்வர் அலுவலகமாகவும் மாற்ற பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்திருக்கிறார்களே தவிர தீர்ப்பாக சொல்லவில்லை. வாரிசுதாரர்களின் பிடியில் போயஸ் கார்டன் இல்லம் போகாமல் தடுக்க வேறு வழியே இல்லை என்கிற நிலையில் பரிசீலிக்கலாம். எந்தச் சூழலிலும் நினைவில்லமாக மாற்றுவதிலிருந்து பின்வாங்கிவிடக்கூடாது. தற்போதைய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் தந்திருப்பதால் அதனைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் நமது நிலையில் உறுதியாக இருப்போம். மேல் முறையீட்டிலும், இரண்டாம் நிலை வாரிசுகளுக்குத்தான் சொந்தம் என்பது உறுதியானால், சொத்தின் மதிப்பின்படி அவர்களுக்கு செட்டில் மெண்ட் செய்துவிட்டு, இல்லத்தை அரசுடமையாக்கப் போடப் பட்டுள்ள அரசாணையை நடை முறைப்படுத்தவோ அல்லது அ.தி.மு.க.வின் சொத்தாக மாற்றவோ நடவடிக்கை எடுக்கலாம்.
 

deepa


வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை 100 கோடியையும் வாரிசுதாரர்கள்தான் செலுத்த வேண்டியது வரும். அவர்களால் 100 கோடி ரூபாயைக் கட்ட முடியாது. அதனால், சொத்துகளை ஏலம் விட்டுத்தான் அபராத தொகையை நீதிமன்றம் எடுக்கும். போயஸ்கார்டன் இல்லம் ஏலத்திற்கு வராமல் சட்டரீதியான முயற்சிகளையும் கட்சி ரீதியான நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம் என பல ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்''’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்களோடு தொடர்புடைய அ.தி.மு.க. சீனியர்கள்.
 


இப்படி ஒரு உத்தரவு வரும் என்பதை அறிந்துதான் அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலை அவசரம் அவசரமாக எடப்பாடி வாங்கினார் எனவும் சொல்கின்றனர். இந்த நிலையில், ஜெ.வின் வாரிசுதாரர்களை உயர்நீதிமன்றம், அடையாளப்படுத்தியிருப்பதால், சுதாகரனை வைத்து ஒரு விளையாட்டை துவக்க சசிகலா குடும்பத்தினர் ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

இது குறித்து சசிகலா உறவுகள் தரப்பில் விசாரித்தபோது, "1991-96 காலகட்டத்தில் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூன்றாவது மகன் சுதாகரனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேத்தி சத்யலட்சுமியை மணமுடிக்க சிவாஜியின் அன்னை இல்லத்தில் திருமண ஓலை எழுதப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், திருமண ஓலை எழுதப்பட்ட போது, இன்னார் மகன் என சுதாகரனை அய்யர் விளித்தபோது குறுக்கிட்ட ஜெயலலிதா, வனிதா-விவேகானந்தனின் மகன் மட்டுமல்ல; சுதாகரன் என் வளர்ப்பு மகன் என எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி வளர்ப்பு மகனானார் சுதாகரன். அதன்பிறகு, போயஸ்கார்டனில் வனிதா-விவேகானந்தன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் முன்னிலையில் சில சடங்குகள் மூலம் 1995-இல் வளர்ப்பு மகனாக சுதாகரனை சுவீகாரம் செய்து கொண்டார் ஜெயலலிதா. அதன்பிறகு வளர்ப்பு மகனின் திருமணத்தை எந்தளவுக்கு ஆடம்பரமாக ஜெயலலிதா நடத்தினார் என்பது உலகமறியும்.

ஆனால், 1996 தேர்தல் தோல்விக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனச் சொல்லி, சசிகலா குடும்பத்தினரை கார்டனிலிருந்து வெளியேற்றிய நிலையில், 1996, ஆகஸ்டில் சுதாகரன், தனது வளர்ப்பு மகன் இல்லை’என அறிவித்தார். சுதாகரன் மீது கஞ்சா வழக்கெல்லாம்கூட போடப்பட்டது. இதெல்லாம் ஜெயலலிதா தனது இமேஜ் பாதுகாப்புக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் எடுத்த நடவடிக்கை. எல்லோர் குடும்பத்திலும் இருக்கும் தாய்-பிள்ளைக்கான தகராறுதான். அதனால், வளர்ப்பு மகன் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி தீபா, தீபக் வகையறாக்களுக்கு ஜெ.வின் சொத்துகள் செல்வதைத் தடுக்க தற்போது திட்டமிடப்படுகிறது. இதற்காக, சட்டரீதியான யோசனைகளைச் சிறையிலுள்ள சசிகலாவிடம் தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்'' என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் சொத்துகளை வளர்ப்பு மகன் சொந்தம் கொண்டாட முடியுமா? என்கிற கேள்வியை மூத்த வழக்கறிஞர்களிடம் நாம் கேட்டபோது, ஒரு பெண் மரணமடைந்து விட்டால் அவருடைய சொத்துகள் வாரிசுரிமைச் சட்டப்படி, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள்தான் வாரிசுதாரர்கள். கணவரும் பிள்ளைகளும் இல்லாத சூழலில், அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குப் போய்ச்சேரும். ஜெயலலிதாவை பொறுத்தவரை அவரது பெற்றோர்களும், அவருடன் பிறந்தவர்களும் உயிருடன் இல்லை. தவிர, ஜெயலலிதாவுக்கு திருமணமும் ஆகவில்லை. அந்த வகையில், ஜெயலலிதாவின் சொந்த உடன்பிறப்புகளின் வாரிசுகள் இருந்தால் அவர்கள்தான் சட்டப்படி சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்.

அதே சமயம், தனிப்பட்ட முறையில் தனது சொத்துகள் குறித்து ஜெயலலிதா உயில் எழுதியிருந்தாலோ அல்லது தனது வாரிசாக ஒரு குழந்தையைத் தத்து எடுத்திருந்தாலோ அதுதான் முதன்மைப்படுத்தப்படும். உயிலில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களும் தத்து எடுக்கப்பட்ட வாரிசுகளும்தான் சொத்துக்களுக்கான வாரிசுதாரர்கள். எழுதப்பட்ட உயில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படாமலிருந்தால் கூட உயிலுக்கு ஆயுள் உண்டு. ஆனால், உயிலை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டால், உயிலின் தன்மை குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உயிலில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களின் பொறுப்பு.

ஜெயலலிதா விவகாரத்தில் உயில் எழுதப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் எதுவும் இல்லை. அதேசமயம், சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்தாரே தவிர, அவரை முறைப்படி தத்து எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், சுதாகரனை சட்டப்படி தத்து எடுக்க முடியாது என்பதால்தான். அதாவது, ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு சட்டத்தில் பல நிபந்தனைகள் இருக்கின்றன. குறிப்பாக, குழந்தை தத்து எடுப்பு சட்டத்தின்படி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுக்கும் போது, அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் குறைந்தபட்சம் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும். மேலும், 15 வயதுக்கு குறைவானதாக அந்தக் குழந்தை இருக்க வேண்டும்.

அந்த வகையில், சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்த போது அவர் சுமார் 27, 28 வயதுள்ளவராக இருந்திருக்கிறார். அதனால் தான் சுதாகரனை ஜெயலலிதாவால் தத்து எடுக்க முடியாமல் வளர்ப்பு மகன் என அறிவித்தார். ஒரு கட்டத்தில் வளர்ப்பு மகன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆக, சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளை கிடையாது என்பதால் சட்ட ரீதியான வாரிசாக அவர் இருக்க முடியாது; சொத்துகளை சொந்தம் கொண்டாட உரிமை கோரவும் முடியாது. சசிகலா தரப்பிலோ அல்லது சுதாகரன் தரப்பிலோ கோர்ட்டில் வழக்கு போட்டாலும் மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள்.
 

 

admk


எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கே ஜெ.வின் சொத்துகள் செல்வதற்கு வாய்ப்பு அதிகமிருக்கும் நிலையில், ஜெயலலிதாவிற்கான சொத்துகள் எவ்வளவு என ஆராய்ந்தபோது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அசையும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 188 கோடி ரூபாய்தான். தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா சொல்லியுள்ள கணக்கு இது. ஆனால், அவரின் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்றே மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் அடையாளப் படுத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் இதையெல்லாம் குறிப்பிடவில்லை ஜெயலலிதா.
 

http://onelink.to/nknapp


இப்படிப்பட்ட சூழலில்,போயஸ்கார்டன் இல்லம் தீபா வகையறாக்களுக்குப் போகக்கூடாது என எடப்பாடிக்கு சசிகலா தகவல் அனுப்பியிருப்பதாக அ.தி.மு.க. மேலிடத்தில் சொல்லப்படுகிற நிலையில், என் அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் குடியேறுவேன் என சூளுரைத்திருக்கிறார் தீபா. பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஜெ.வின் சொத்துகள் அவரது மரணத்தைப் போலவே மர்மமாக இருக்கிறது. சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு, ஜெ சொத்து குறித்த பரபரப்பு மேலும் அதிகரிக்கும்.



 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.