Skip to main content

இப்போவே பிளான் பண்ணிக்கங்க... - 2018 விடுமுறைகள் ஒரு அலசல்

Published on 03/01/2018 | Edited on 05/01/2018
இப்போவே பிளான் பண்ணிக்கங்க...   - 2018 விடுமுறைகள் ஒரு அலசல்    





ரணகளமாகவோ, கிளுகிளுப்பாகவோ எப்படியோ ஒரு வழியாக 2017 முடிந்தது. புத்தாண்டு திங்கள்கிழமை அன்று வந்து விடுமுறை தந்துவிட்டது. இந்த வருடத்தின் முதல் வேலை நாளான நேற்று அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு சென்று, "அடுத்து எப்போ விடுமுறை வரும்"  என்று காலண்டரை பார்க்க ஆரம்பித்திருப்போம், நண்பர்களுடன் இதைப்பற்றி தீவிர ஆலோசனை நடத்தியிருப்போம். இருந்தாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லையே என்று கவலைப்பட  வேண்டாம் நாங்க இருக்கோம்.

ஜனவரி மாதம் என்றாலே விடுமுறைதான். அதிலும் நாம் அதிகம் எதிர்பார்ப்பது பொங்கலைதான்(வேட்டி, கரும்பு, பொங்கல், ஜல்லிக்கட்டு, பெரியோரை வணங்கும் காணும் பொங்கல் என ஒரே கொண்டாட்டமாகதான் இருக்கும்)  அப்படி எதிர்பார்த்த பொங்கல் ஞாயிற்று கிழமை வந்து கொஞ்சம் சோகத்தை கிளப்பியிருக்கிறது. 

பிப்ரவரி மாதம் இருக்கிறதே 28 நாள்தான் அதில் என்ன விடுமுறை என நினைத்தார்கள் போல அந்த மாதத்தில் அரசாங்க விடுமுறையே இல்லை. விடுமுறை விரும்பிகளுக்கு இது மிகவும் டல்லான மாதம்தான். அதுதான் 28 நாள் பொறுத்துக்கொள்ளலாம் ஆனால், ஜூலை மாதத்திலும் இதேபோன்று அரசாங்க விடுமுறையை இல்லையென்றால் என்னதான் செய்வது. 

தெலுங்கு வருட பிறப்பு (மார்ச் 18) , கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 2), என்று  அரசாங்க விடுமுறை எல்லாம் ஞாயிற்று கிழமையில் வருவது கொஞ்சம் வருத்தம்தான்.

சித்திரை திருநாளையாவது சிறப்பிக்கலாம் என்றால் அந்த விடுமுறையும் வேலை நாட்களில் வராமல் (ஏப்ரல் 14) சனிக்கிழமை அன்று வந்து  நம்மை ஏமாற்றுகிறது.  

நீண்ட விடுமுறைகளாக இருப்பது  பொங்கலும், ஆயுத பூஜையும்தான். பொங்கல் விடுமுறை, ஜனவரி 14 ஞாயிறு அன்று வந்து கொஞ்சம் சோகத்தை தந்தாலும், அதை மிஞ்சும் வகையில் பூஜை விடுமுறை (அக்டோபர் 18) வியாழன் தொடங்கி ஞாயிறு (அக்டோபர் 21) வரை நீண்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை வந்தாலே மகிழ்ச்சிதான். ஏன்னென்றால் அது சனி, ஞாயிறுடன் சேர்ந்து மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறையாக மாறிவிடும். இந்த வருடத்தில் மொத்தம் ஐந்து விடுமுறைகள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது, ஆக மொத்தம் பதினைந்து நாட்கள் விடுமுறை.(ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 30 புனித வெள்ளி, ஜூன் 15 ரம்ஜான், செப்டம்பர் 21 முஹரம், அக்டோபர் 19 விஜயதசமி) 'ஐயா ஜாலி' என வாய்விட்டு சந்தோசப்படுபவர்கள் விடுமுறையை நன்றாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுங்கள் உடனே.      

டபுள் டமாக்கா விடுமுறையான ரம்ஜான் ஜூன் 15 வெள்ளியிலும், பக்ரீத் ஆகஸ்ட் 22 புதனிலும் வந்து இரண்டு டபுள் டமாக்கா சந்தோசத்தை தருகிறது.  (டபுள் டமாக்கா எனப்படுவது யாதெனில் விடுமுறையுடன் கூடிய பிரியாணியே ஆகும் என்கிறார்கள் பிரியாணி பிரியர்கள்)

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் ஆறாம் நாள் வருகிறது. செவ்வாய் கிழமை என்பதால் திங்கட்கிழமை அவர்களே விடுமுறை கொடுத்து சனிக்கிழமையில் இருந்து செவ்வாய் வரை விடுமுறை அளிப்பார்கள் என எதிர்பார்ப்போம். போதவில்லையென்றால் புதன் வரை விடுமுறை கொடுப்பார்கள் என்று பிராத்திப்போம். அதிக போனஸ், அதிக ஆனந்தம் இது வேலை பார்ப்பவர்களின் நம்பிக்கை (நம்பிக்கை அதான எல்லாம்) 

உலகம் முழுவதும் விடுமுறை விட்டு சிறப்பாக கொண்டாடுகிற பண்டிகையான கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 செவ்வாய் கிழமை வருகிறது, அந்த சமயத்தில் பள்ளி மாணவர்கள்  எல்லாரும்  அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இருப்பார்கள், இந்த விடுமுறை வேலை பார்ப்பவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும்தான் இரட்டை சந்தோசமாக இருக்கும்.
   
ஆக மொத்தம் இந்த வருடம் தமிழகத்தில் அரசாங்க விடுமுறை, மொத்தம் 23 நாட்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் மக்களே. 

-சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்