Skip to main content

சர்ச்சைகளின் நாயகரா நேரு?

Published on 14/11/2017 | Edited on 14/11/2017
சர்ச்சைகளின் நாயகரா நேரு?  

சமூக ஊடகங்களில்  பரவும் புகைப்படங்கள்...  

இந்தியாவின் முதல் பிரதமரான   'ஜவஹர்லால் நேரு' நவம்பர் 14 அன்று பிறந்தார். இந்நாள்  இந்தியாவில் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இவர் இந்தியாவின் விடுதலைக்காகப்  போராடியவர்களில் ஒருவர். புதிய  இந்தியாவின் சிற்பியாக, ஜனநாயகத்தை சரியாக அணுகியவராக, குழந்தைகளின் நாயகனாக    அறியப்பட்ட  ஜவஹர்லால் நேரு பற்றி சமீப காலமாக  சர்ச்சை கிளப்பும் புகைப்படங்களும், செய்திகளும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்-அப்பிலும் பரவி வருகின்றன. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையில் அவரது பங்கு, சுதந்திரத்திற்கு பிறகான வெளியுறவுக் கொள்கைகள், காங்கிரஸ் கட்சியில் அவரது நடவடிக்கைகள் என எதை வேண்டுமானாலும்  அரசியல் ரீதியாக ஆராய்ந்து  விமர்சிக்கலாமெனும்போது, அவருடைய தனிமனித பழக்கவழக்கங்களை வெளிக்கொணர்ந்து விமர்சிப்பவையாக இவை இருந்தன.          






நேருவைப் பற்றிய சர்ச்சை  புகைப்படங்களில் அதீத புகழ் பெற்றது இந்தப் படமே.  இந்தப்படத்தில் நேருவுடன் இருப்பவர் எட்வீனா.   நேருவிற்கும் பிரிட்டிஷ் இந்திய வைசராய்  மவுன்ட் பேட்டனின் மனைவி எட்வீனாவுக்கும் இருந்த நட்பைப் பற்றி  அறுபதுகளிலேயே  பத்திரிகைகளில் பேசப்பட்டது. ஆனால், பெரிதாகப் பரவவில்லை. ஆனால், இப்போதைய  வைரல் உலகத்தில் நேருவும் தப்பவில்லை.  சமூக வலைதளங்களில்  சுற்றிக்கொண்டு இருக்கிறது. இதைப் பற்றி  மவுன்ட் பேட்டன்  கூறுகையில், அவர்கள் இருவரும் நண்பர்கள், அது எனக்கும்  தெரியும் என்று கூலாகக் கூறியுள்ளார். நாம் தான் அதை மிக சூடாகப் பேசியும் பரப்பியும் வருகிறோம் போல.






அதற்காக,  நேரு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. உலகிலேயே முதன் முதலாக ஜனநாயக முறைப்படி கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது இந்தியாவில்தான். 1957 ஆண்டு கேரளாவில் வென்றது  கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சியே இருந்தது. இதனால் 1959 ம் ஆண்டு, நேரு கேரளாவில் 356 அரசியல் சாசனப்பிரிவின் படி மாநில அரசை கலைத்தார். ஜனநாயக முறைப்படி வென்ற  அரசை சரியான  காரணம் இல்லாமல் நேருவின் அதிகாரம் உடைத்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளெல்லாம் மறக்கப்பட்டு, தனிமனித ஒழுக்கம் பேசப்படுகிறது. இது தலைவர்களின் புகழை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் 'கேரக்டர் அஸ்ஸாஸினேஷன்' என்றும் பார்க்கப்படுகிறது. 

வரலாறு என்றாலே பல சர்ச்சைகளை உடையதுதான். உண்மை என்ன என்று யாருக்கு தெரியும்? ஆனால் இது எதுவும் ரகசியமாக நடைபெறவில்லை. புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து கொண்டுதான் புகை பிடிக்கிறார், அவர்களுடன் பழகியிருக்கிறார். கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் இப்படியும் எதிர்ப்பார்கள். அதே நேரம் மக்கள் பின்பற்றும் தலைவர்களென்று  ஆகிவிட்டால்   தனிமனித வாழ்க்கையென்பதும் இருக்கிறதா என்ன?

சந்தோஷ் குமார்             
         

சார்ந்த செய்திகள்