Skip to main content

ஜெயலலிதாவை உத்தமராக்கும் ரெய்டு முயற்சிகள் ஜெயிக்குமா?

Published on 13/11/2017 | Edited on 14/11/2017
ஜெயலலிதாவை உத்தமராக்கும் ரெய்டு
முயற்சிகள் ஜெயிக்குமா?

சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து நடத்தப்பட்ட ரெய்டுகளில் மீடியாக்களின் ஒருதலைப்பட்சமான, ஓரவஞ்சனையான செய்திகள் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காலையில் ஒரு டீ மாஸ்டர், டீயை ஆற்றுவதை விட்டுவிட்டு, "பேப்பர் படிக்கப்படிக்க நமக்குத்தான் பிரஷர் ஏறுது. பிரஷர் மாத்திரை போடனும்போல" என்கிறார்.

அந்த அளவுக்கு ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, தங்கக் குவியல், வைரக்குவியல் என்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை பரப்புகின்றன.

இதில் உண்மை இருக்கிறதா என்றால், எல்லா செய்திகளுமே கூறப்படுகிறது, நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது என்று பட்டுக்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத பத்திரிகை மொழியிலேயே இருக்கின்றன.


எல்லோரும் செய்திகள் வெளியிடும்போது, இந்த சொத்துக்கள் அனைத்தும் சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களைப் போலவே சித்தரிக்கின்றன. இந்தச் சொத்துக்களை குவித்துவிட்டு, நம்பர் ஒன் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதாவை வசதியாக ஒதுக்குகின்றன.

குற்றவாளியாக செத்துப்போன ஜெயலலிதாவை உத்தமியாகக் காட்டும் வேலையாகவே இதை நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா கும்பல் இந்த சொத்துக்களை குவித்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடந்த ஐந்து நாட்களாக ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால், மீடியாக்களின் இந்த ஒருதலைப்பட்சமான செய்திகள் ஜெயலலிதாவுக்கு புனித பிம்பத்தை உருவாக்க உதவுமா? அல்லது மீடியாக்களை அம்பலப்படுத்த உதவுமா என்பதே இப்போது தொக்கி நிற்கும் கேள்விகள்.

வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டவர்களை மிகப்பெரிய ஊழல் பேர்வழிகளைப் போல ஊதுகிறார்கள். ஆனால், மக்களையும் மீடியாக்களையும் பட்டவர்த்தனமாக முட்டாள்களாக்கி, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டனை கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவை இரும்புப்பெண்மணி என்று பில்டப் செய்கிறார்கள். அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க இன்னமும் முயற்சி செய்கிறார்கள்.

மீடியாக்களின் இந்த முயற்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது போகபோகத்தான் தெரியும்.

- ஆதனூர் சோழன்



சார்ந்த செய்திகள்