Skip to main content

கியூபா புரட்சியின் நாயகன் காஸ்ட்ரோ!

Published on 25/11/2017 | Edited on 25/11/2017
கியூபா புரட்சியின் நாயகன் காஸ்ட்ரோ!
(வெற்றிபெற்றது கியூபா புரட்சி)






கியூபாவின் சர்வாதிகாரி படிஸ்டா ராணுவத்தின் லட்சணம் அம்பலமாகி விட்டது.

காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிக்குழுவுக்கு எதிராக ஒழிப்பு வேட்டை நடத்திய ராணுவம் தோற்று ஓடிவிட்டது.

ஓடிய ராணுவத்திடம் பறிமுதல் செய்த ஆயுதங்களும், விமானங்கள் மூலம் சியரா மாஸ்ட்ரோ மலைப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங் களும் புரட்சிக்குழுவை வலுப்படுத்தியது.

இதுதான் தாக்குதலுக்கு சரியான நேரம். அவர்கள் சுதாரிப்பதற்குள் அடித்து நொறுக்க வேண்டியதுதான். காஸ்ட்ரோ முடிவெடுத்து விட்டார்.

மலை முகாம்களில் இருந்து நான்கு பிரிவுகளாக புரட்சிப்படை புறப்பட்டது. காவ்டோ சமவெளியில் காஸ்ட்ரோ தலைமையிலான குழு அணிவகுத்தது.

இந்தக் குழுவில் காஸ்ட்ரோவுடன் ஹியூபெர் மாடோஸ், ராவுல் காஸ்ட்ரோ ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

மத்திய பகுதி மாநிலங்களை கைப்பற்ற, சே குவேரா, ஜெய்மே வேகா, கேமிலோ சியென்பியூகோஸ் ஆகியோர் தலைமையிலான மூன்று குழுக்களுக்கு காஸ்ட்ரோ கட்டளையிட்டார்.

மற்ற குழுக்கள் கிழக்குப்பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தாக்குதல் நடத்தப் புறப்பட்டன.

ஒரேசமயத்தில், கியூபா முழுவதும் புரட்சிக்குழுக்கள் தாக்குதலைத் தொடங்கியதும் ராணுவம் திகைத்தது.  எதிர்த்து போரிடும் குழுக்களில், தங்கள் சொந்த நாட்டின் மைந்தர்கள் இடம் பெற்று இருப்பதை ராணுவம் உணர்ந்திருந்தது. எனவே, பல இடங்கள் எதிர்ப்பே இல்லாமல் புரட்சிக்குழுக்களின் வசம் வீழ்ந்தன.

காஸ்ட்ரோ தலைமையிலான குழு கிரான்மா மாநிலத்தின் குய்ஸா நகரை முதலில் சுற்றிவளைத்து தாக்கியது. எதிரிகள் சிதறி ஓடினர். காவ்டோ சமவெளியின் பெரும்பாலான நகரங்களை காஸ்ட்ரோ குழு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

மறுபுறம் சே குவேரா, கேமிலோ தலைமையிலான குழுக்கள் தொடர்ந்து முன்னேறின. வில்லாஸ் மாநிலத்தின் ஊடாக பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய அந்தக் குழுக்கள் மாநில தலைநகரான சாந்தா கிளாரா மீது தாக்குதல் நடத்த தயாராகின.

1958 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தனது குழுவில் அலெய்டா மார்ச் என்ற பெண் போராளியை இணைத்துக் கொண்டார் சே. தாக்குதல் தீவிரமடைந்தது.

புரட்சிக்குழு ஒரு பகுதிக்குள் நுழைந்ததும் அங்குள்ள மக்கள் ஆரவாரத்துடன் வீதிகளில் இறங்கி ஆயுதங்களை உயர்த்தி வரவேற்பதை வழக்கமாக கொண்டனர். இது ராணுவத்திற்கு புதிய சிக்கலை உருவாக்கியது.

இதுவரை கியூப வரலாற்றில் இல்லாத புதிய வகை புரட்சியாக இது இருந்தது. ராணுவம் புரட்சிக்குழுக்களுடன் சமரசம் செய்வதை அறிந்த ராணுவ தளபதி கேண்டில்லோ, காஸ்ட்ரோவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக அறிவித்தார்.

சாண்டியாகோ டி கியூபா நகரில் முகாமிட்டிருந்த காஸ்ட்ரோவை அங்குள்ள ஓரியன்ட் மில்லில் சந்தித்தார். அப்போது கத்தோலிக்க பாதிரியார்கள், அரசு உயரதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர். இரவு எட்டு மணிக்கு ஹெலிகாப்டரில் வந்த கேண்டில்லா, 4 மணி நேரம் பேசினார்.

புரட்சிக்குழுவின் நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்படுவதாகவும், பாடிஸ்டா பதவியிலிருந்து விலகவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

ஆனால், காஸ்ட்ரோவுக்கு இது சாத்தியமாகும் என்பதில் நம்பிக்கையில்லை. இதற்கு முன் இதுபோல கடைசி நிமிடத்தில் பல ஆட்சிக்கவிழ்ப்புகள் திசை மாறியுள்ளன. இந்த முறை ஆட்சிக்கவிழ்ப்பு அல்ல. இது புரட்சி.

முற்றிலுமாக கியூப வரலாற்றை புரட்டிப்போடுவதற்காக நடத்தப்படும் புரட்சி. இதில் சறுக்கல் ஏற்பட அனுமதிக்க முடியாது.

கேண்டில்லோ தனது வார்த்தையில் உறுதியாக இருப்பாரா?

“உறுதியாக இருப்பேன்”

உத்தரவாதம் அளித்தார் கேண்டில்லோ.

“நீங்கள் கைது செய்யப்படலாம்”

“இல்லை. அதுபோல நடக்காது”

அடித்துச் சொன்னார் கேண்டில்லோ.

“ஹவானாவுக்குள் நாங்கள் நுழைந்ததும் எங்களிடம் ஆட்சியை ஒப்படைப்பீரா?”

“நிச்சயமாக”

உறுதியளித்துவிட்டுப் போன கேண்டில்லோ, தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.

இந்நிலையில்தான், 31 ஆம் தேதி சாந்தா கிளாராவை சே குவேரா கைப்பற்றினார். இந்தச்  செய்தி புரட்சிக்குழுவின் ரேடியோவில் ஒலிபரப்பானவுடன் மக்கள் வீதிகளில் திரண்டனர். சாந்தா கிளாரா வீழ்ந்ததும், கியூப ராணுவம், சர்வாதிகாரி படிஸ்டாவை கைவிட்டது. மக்களுடன் இணைந்தது. புரட்சிகரக் குழுவுடன் படிஸ்டாவின் ராணுவத் தளபதிகள் உடன்படிக்கை செய்துகொண்டனர். அஞ்சி நடுங்கிய படிஸ்டா, 1959 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி டொமினிகன் குடியரசுக்கு தப்பி ஓடினார்.

நாட்டைவிட்டு ஓடும்போதும், தனது ராணுவ தளபதிகளை நீக்கிவிட்டு, காஸ்ட்ரோவுடன் பேச்சு நடத்தி திரும்பிய கேண்டில்லோவை உள்ளடக்கிய ராணுவக்குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

அந்தக் குழு, கியூப உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கார்லோஸ் பியத்ரோவை தற்காலிக அதிபராக நியமித்தது.

ராணுவக் குழுவின் முடிவை காஸ்ட்ரோ ஏற்கவில்லை. கியூபா முழுவதையும் கைப்பற்றும்படி  புரட்சிக்குழுக்களுக்கு உத்தரவிட்டார்.

கியூபாவில் புரட்சி வெற்றிபெற்ற செய்தியும், படிஸ்டா நாட்டைவிட்டு ஓடிய செய்தியும் உலகம் முழுவதும் ஒலிபரப்பானது. நாளிதழ்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன.

அடுத்தநாள், அதாவது ஜனவரி 2 ஆம் தேதி சே குவேரா தனது வீரர்களுடன் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தார். அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. ஒரு மாபெரும் புரட்சி வெற்றிபெற்றதை மக்கள் கண்கூடாகப் பார்த்தனர். முற்றிலும் இளைஞர்கள் அடங்கிய அந்தப் புரட்சிக்குழுவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க முதன்முறையாக மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தெருவுக்கு வந்தனர்.

அடுத்தநாள் லா கபானா ராணுவ முகாமை சே குவேரா முற்றுகையிட்டார். அங்கிருந்த 3 ஆயிரம் வீரர்கள் சே குவேரா முன்னிலையில் சரணடைந்தனர்.



அவர்களிடம் சே கண்ணியமான முறையில் பேசினார்.

“நீங்கள் எங்களுக்கு படை அணிவகுப்பை கற்றுக்கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு சண்டையிட கற்றுத் தருகிறோம்” என்றார் சே.

தலைநகர் ஹவானாவில் விடுதலைக் கொண்டாட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஓரியன்ட் மாநிலத்தின் தலைநகரான சாண்டியாகோ டி கியூபாவை காஸ்ட்ரோவின் குழு முற்றுகையிட்டது. காஸ்ட்ரோ குழுவை எதிர்க்க வேண்டாம் என்று ராணுவ தளபதிகள் உத்தரவிட்டனர். எனவே, அந்த மாநிலம் முழுவதும் காஸ்ட்ரோவின் கையில் எளிதில் வீழ்ந்தது.

ஜனவரி 3 ஆம் தேதி, சாண்டியாகோ டி கியூபாவில் பெருந்திரளான மக்கள் மத்தியில் பேசினார். வழக்கம்போலான நீண்ட, ஆவேசமான அந்த உரையில், கியூபாவில் புரட்சி தொடங்கிவிட்டதாக அறிவித்தார்.

“இது 1895 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் போல அல்ல. அப்போது, கியூபாவின் உள்விவகாரங்களில், அமெரிக்கா தலையிட்டது. அதன் விளைவாக மேலும் 30 ஆண்டுகள் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தை நடத்திய கலிக்ஸ்டோ கார்சியாவை பொறுப்பேற்கக் கூட அனுமதிக்க வில்லை.

அடுத்து மீண்டும் 1933ல் மச்சாடோ அரசுக்கு எதிராக வெடித்த கலகமும் பிரயோஜனம் இல்லாமல் போயிற்று. அப்போது, இதே படிஸ்டா தலைமையிலான குழு அமெரிக்க கைக்கூலியாக மாறி மேலும் 11 ஆண்டுகள் நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.

அதற்கு மாற்றாகத்தான் 1944ல் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதையும் படிஸ்டா கோஷ்டியினர் இப்போது சீர்குலைத்துவிட்டனர்.

இன்று நடைபெற்றிருப்பது நிஜமான புரட்சி. மக்களுடைய வாழ்க்கையில் வசந்தத்தை அறிமுகப்படுத்தப் போகிற புரட்சி. இனி இங்கு எல்லாம் சமம்தான். ஆண்டான் அடிமை இருக்க முடியாது. எல்லோரும் சமநிறை என்ற உணர்வு மட்டுமே பரவி நிற்கும்.

நாம் நடத்திய புரட்சியில், யாரும் யாரையும் கொன்று குவிக்கவில்லை. தெருக்களில் ரத்த ஆறு ஓடவில்லை. அழுகுரல் இல்லை. வேதனையின் வெளிப்பாடு இல்லை. உற்சாகம் மட்டுமே நிலவியது. மகிழ்ச்சி ஆரவாரத்தை மட்டுமே கேட்க முடிந்தது.

மக்கள் ஒற்றுமையின் மகத்துவத்தை அறியாதவர்கள் அறிந்துகொள்ளும்படி இந்த புரட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம், இப்போதுதான் புரட்சி தொடங்கியுள்ளது. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

தளபதி கேண்டில்லோ தலைமையிலான ராணுவக்குழுவை நாம் நிராகரிக்கிறோம். அந்தக் குழு நியமித்த அதிபரையும் நாம் ஏற்கவில்லை. பியெத்ரா அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் செய்து நமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களுக்கு நாம் தரும் எச்சரிக்கையாக இருக்கும்” என்று முழங்கினார்.

காஸ்ட்ரோ விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து, ராணுவக்குழு, அதிபராக நியமித்த கார்லோஸ் பியத்ராவுக்கு பதவிப்பிரமாணம் செய்ய, உச்சநீதிமன்றமும்  மறுத்துவிட்டது.

காஸ்ட்ரோவின் ஆணைக்கு உடனடியாக செவிசாய்த்த மக்கள், நாடுமுழுவதும் பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது, புதிய அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியது. மக்கள் சக்தியின் எழுச்சியைத் தொடர்ந்து, சாண்டியாகோ டி கியூபா நகரின் அவசர நிலை நீதிமன்ற நீதிபதியான டாக்டர் உருட்டியாவை அதிபராக நியமிக்கும்படி காஸ்ட்ரோ கேட்டுக்கொண்டார்.

அந்தச் சமயத்தில் வெனிசூலாவில் இருந்த உருட்டியா, விமானத்தில் விரைந்து வந்தார்.

காஸ்ட்ரோவை கியூபாவின் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் ஜனவரி 5 ஆம் தேதி சட்டப்பேராசிரியர் ஜோஸ் மிரோ கார்டோன் புதிய அரசை உருவாக்கினார். அதில் அவர் பிரதமராகவும், உருட்டியா அதிபராகவும் பொறுப்பேற்றனர்.

இரண்டு நாள்கள் கழித்து புதிய அரசை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி காஸ்ட்ரோவும் அவரது குழுவினரும் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தனர்.

நகரம் முழுவதும் உற்சாக பெருவெள்ளம். வீதிகள் தோறும் மக்கள் அலைமோதினர். தங்கள் வாழ்வை வளமாக்க வந்த மாமணியை வாழ்த்தி அவர்கள் முழக்கமிட்டனர். கட்டிடங்கள் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர். ஜீ¨லை 26 இயக்கத்தின் கறுப்பு சிவப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு இருந்தன.

வெற்றி அணிவகுப்பின் போது பீரங்கியில் அமர்ந்து வந்த சே குவேரா, பின்னர் ஒரு ஜீப்புக்கு மாறினார். அங்கிருந்து இடம் மாறி காஸ்ட்ரோவும் கேமிலோவும் வந்த வாகனத்தில் தாவி ஏறினார்.

அதே நாளில் கியூபாவின் தலைமைத் தளபதியாக காஸ்ட்ரோ பொறுப்பேற்றார். தனது நம்பிக்கைக்குரிய தளபதி சே குவேரா கியூப குடிமகனாக பிரகடனப்படுத்தப்பட்டார். ஹவானாவின் மத்தியச் சிறைத்தலைவராக சே நியமிக்கப்பட்டார்.

எல்லாம் சுமுகமாக நிறைவேறியது. ஆனால், அமெரிக்காவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வித பொறுப்புகளையும் வகித்துப் பழக்கமில்லாத இளைஞர்கள், கியூபாவை எப்படி நிர்வகிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஹவானாவில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில் கியூபாவின் புதிய அதிபர் உருட்டியா, அரசின் முக்கிய அதிகாரிகள், உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த செய்தியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டு காஸ்ட்ரோ உணர்ச்சிமிகு உரையாற்றினார்.


காஸ்ட்ரோவின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 32 வயதில் மாபெரும் மக்கள் தலைவருக்கு உரிய கவுரவத்தைப் பெற்றுத்தந்தது இந்தக்கூட்டம். புரட்சி வெற்றிபெற்ற சில நாட்களில் ஹவானா நகரம் திணறும்படி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காஸ்ட்ரோ தனது ஆளுமைத் திறனை உலகுக்கு நிரூபித்தார்.

“இங்கே 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருக்கிறீர்கள். உங்களிடம் எனக்காக ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நான் கூறுவதை நீங்கள் கேட்க முடியும்.

ஹவானாவில் இவ்வளவுதான் மக்கள் கூட முடியும் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கிறது. கியூபாவின் 60 லட்சம் மக்களும் இங்கே கூட வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கிறார்கள். ஹவானா நகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. எல்லோரும் இங்கே திரண்டிருக்கிறார்கள்.

நகரில் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளும் இந்தக் கூட்டத்திற்காக பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூட்டத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் இங்கே திரண்டிருக்கிற மக்கள் கூட்டத்தில் 5 லட்சம் பேர் மட்டுமே எனது உரையை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் கேட்கும்...” என்று கூறிய காஸ்ட்ரோ, கூட்டத்தினர் அமைதியாகும் வரை காத்திருக்கிறார்.

ஆச்சர்யப்படும் வகையில் எள் விழுந்தால் கேட்கும் அமைதி நிலவுகிறது. பின்னர் தனது உரையைத் தொடர்ந்தார் காஸ்ட்ரோ...

“நீங்கள் புரட்சியின் சார்பாக இங்கே நிற்கிறீர்கள். இன்று நீங்களும் நாங்களும் சுதந்திரமாக நிற்கிறோம். இது மக்களுக்கான ஆட்சி என்கிற பெருமிதத்தோடு நிற்கிறோம். இப்போது நீங்கள் விரும்பியதை எங்களால் தரமுடியும்.

நமது புரட்சி உரி¬மைகளை மீட்டெடுத்துள்ளது. நீதியை நிலைநாட்டி உள்ளது. இது ராணுவ கலகமல்ல.   ஆட்சி மாற்றம். சர்வாதிகாரி படிஸ்டாவை நீக்கிவிட்டு, அவருடைய இடத்தில் புதியவரை நியமித்திருக்கிறோம்.

நமது புரட்சிக்கு எதிராக அமெரிக்காவும் சர்வதேச முதலாளித்துவ பத்திரிகைகளும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இது அபாயமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றன.

கியூபாவின் நலன்களுக்கு எதிரானவர்கள் அதிபர் மாளிகையில் உட்கார்ந்திருந்தபோது இப்படி யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. வெளிநாட்டவருக்கு கியூபாவின் வளங்களை வாரிக் கொடுத்தவர்கள் இருக்கும்வரை யாரும் எதிர்ப்பிரச்சாரம் செய்யவில்லை.

20 ஆயிரம் கியூபர்களை கொன்று குவித்த கொடுங்கோலர்களை யாரும் கண்டிக்கவில்லை. தனிநபர் ஒருவர் 30 கோடி பெஸோ சொத்துக்களைக் குவித்து வைத்திருந்ததையோ, ஒரு டஜன் முதலாளிகள் 300 கோடி பெஸோ சொத்துக்களின் மீது உட்கார்ந்திருந்து இருந்ததையோ யாரும் பொருட்படுத்தவில்லை.

டொமினிகன் குடியரசை 27 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த ட்ரூஜில்லோவை யாரும் கேள்வி கேட்கவில்லை. அங்கு 10 ஆயிரக்கணக்கான ஹெய்தி தீவு மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது அமெரிக்கா. நிகரகுவாவில் 20 ஆண்டுகளாக சோமோஸாவின் சர்வாதிகார ஆட்சிக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஆனால், கியூப புரட்சி மக்களுக்கு எதிரானது என்று பிரச்சாரத்தை கிளப்பி விட்டுள்ளது அமெரிக்கா. இப்போது சொல்லட்டும். இங்கே திரண்டிருக்கிற மக்களைப் பார்த்து சொல்லட்டும்...இது மக்களுக்கு எதிரான புரட்சியா அல்லது மக்கள் புரட்சியா என்று?

அவர்கள் எதிர்ப்பதற்கான காரணங்களை நான் விளக்குகிறேன். கியூபாவின் புரட்சி அமெரிக்கா முழுமைக்கும் ஆபத்து என்று அச்சப்படுகிறார்கள். அங்கு அவர்கள் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்தப் புரட்சி பரவிவிடும் என்று கவலைப்படுகிறார்கள். கியூபாவின் சர்வாதிகார அரசுகள் இதுவரை வெளிநாட்டவருக்கு வழங்கிய சலுகைகள் ரத்து செய்யப்படும் என்ற அச்சத்தில் பிதற்றுகிறார்கள். இங்கே மின்சாரக்கட்டணம் குறையப்போகிறதே என்ற பீதியில் அவர்கள் கூச்சலிடுகிறார்கள்.

புரட்சி வெற்றி பெற்று ஐந்து நாட்களே முடிந்த நிலையில் நமக்கு எதிராக கொடூரமான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதற்கு என்ன காரணம்? நமது புரட்சி உலகிற்கு முன்மாதிரியாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

நம்மிடம் பல்லாயிரக்கணக்கானோர் கைதிகளாக சரணடைந்தனர். அவர்களை பாதுகாத்தோம். நூற்றுக்கணக்கான காயமடைந்தோருக்கு நமது டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார்கள். கியூபாவில் நடப்பதை நேரில் கண்டு எழுத வேண்டும் என்பதற்காகத்தான் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்தோம்.

இங்கே கூடியிருக்கிற மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களா...அல்லது உற்சாகத்தின் விளிம்பில் நிற்கிறார்களா என்பதை அவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அழைத்தோம். புரட்சிகர அரசின் செயல்திட்டங்களை நாளை நான் அவர்களுக்கு விளக்கப்போகிறேன்.

எந்த ஒரு வெளிநாட்டு அரசுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

எங்கே நீதி இருக்கிறதோ அங்கே குற்றங்கள் இருக்காது. எங்கே குற்றங்கள் இருக்கிறதோ அங்கே பத்திரிகை சுதந்திரம் இருக்காது. எங்கே குற்றங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கே மக்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒளித்துக் கொள்வார்கள். இங்கே நடப்பவற்றை நேரில் பார்த்து உண்மையை எழுதுவதற்காகத்தான் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அழைத்தோம்.

புரட்சிக்கு எதிரானவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களைத் தண்டிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களுக்கு எதிரானவர்களை தண்டிக்க வேண்டும் என்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்...”

காஸ்ட்ரோ இப்படி சொன்னவுடன் இரண்டு நிமிடங்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

“கியூப மக்களுக்கு இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் விளக்கிவிட விரும்புகிறேன். புரட்சிக்கு எதிரானவர்கள், அதை சீர்குலைப்பதற்காக புரட்சிக்குழு தலைவர்களைக் கொன்றுவிட சதி செய்வதாக ஒரு அச்சம் எழுந்துள்ளது. தனி நபரை நம்பியல்ல புரட்சி என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். கியூபாவுக்கு தீங்கென்றால் மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்கள் சக்தியை மீறி எதுவும் வெற்றி பெற முடியாது...”

காஸ்ட்ரோவின் நீண்ட உரை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

இது முடிந்து மூன்று நாட்களில், லத்தீன் அமெரிக்காவில் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்போம் என்று காஸ்ட்ரோ பிரகடப்படுத்தினார்.

இன்று காஸ்ட்ரோ நினைவு தினம்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்