Skip to main content

தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வும்!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வும்! 
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்துசெய்ய திட்டமா? 

தமிழகத்தில் அதிமுக அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாஜக ஆதரவுடன் படா டகால்டி வேலைகளில் ஈடுபடுவதும், வேட்பாளர்களை அதிமுகவினர் மிரட்டி விரட்டுவதும், பணத்துக்கு வாங்குவதும் ரொம்ப சகஜம் என்பது கடந்தகால தேர்தல்களை அறிந்தவர்களுக்கு தெரியும்.

2001 ஆம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை இருந்தது.

ஆனால், 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். தனது மனுக்களை திமுக சதிசெய்து நிராகரிக்கச் செய்ததாக ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வென்றது. அதைத் தொடர்ந்து அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே (14-5-2001) ஜெயலலிதாவை முதல்வர் பதவியேற்க அனுமதித்து, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



ஏனென்றால், சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்க கால அவகாசம் இருந்தால், நீதிமன்றத்தில் தடை பெற வாய்ப்பு ஏற்படும் என்று மறுநாளே அவசரஅவசரமாக பதவியேற்றார் ஜெயலலிதா. அன்று சட்டத்தையும் விதிகளையும் காற்றில் பறக்கவிட்டார் ஜெயலலிதா.

மூன்றாண்டுகள் தண்டனை பெற்ற ஒருவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  கவர்னர் பாத்திமா பீவியின் செயலைக் கண்டித்து, ஜெயலலிதாவின் பதவிப் பிரமாணத்தை ரத்து செய்தது.

20011 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அவரை கூட்டணியில் சேர்க்க அதிமுக தயாராக இல்லை. இதையடுத்து, அவர் தனியாக சில தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார்.

அவர் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரும் அடுத்தடுத்து அதிமுகவில் சேர்ந்து அவரையே அதிர்ச்சியடையச் செய்தனர். ஒரு தொகுதியில் மூன்று வேட்பாளர்களை அறிவித்தார் கார்த்திக். மூவருமே அதிமுகவில் சேர்ந்த அதிசயமும் நடந்தது.



2011 தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம், காவல்துறையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது. அதிமுகவினரின் தாராளமான பணப்பட்டுவாடாவுக்கு காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்ததாக புகார் வந்தது.

2014 மக்களவைத் தேர்தலின்போதும், 2016 தேர்தல் முடிவுகளின்போதும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின. போலி வாக்காளர்கள் குறித்த புகார்களை தேர்தலை ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை என்று திமுக குற்றம் சாட்டியது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2016ல் ஜெயலலிதா போட்டியிட்ட சமயத்திலும் இதே புகார்கள் வந்தன. பணப்பட்டுவாடா, போலி வாக்காளர்கள் குறித்த புகார்களை கண்டுகொள்ளாமலேயே தேர்தல் நடைபெற்றது.

ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே பணப்பட்டுவாடா புகார்கள் பகிரங்கமாக ஆதாரப்பூர்வமாக வெளியானபோதும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தேர்தலையே ரத்து செய்தது.

ஆர்.கே.நகர் தேர்தல் நடக்காது என்று பாஜக தலைவர்கள் முன்கூட்டியே பேசினார்கள். இதையடுத்து ரத்தான தேர்தலை நடத்துவதிலும் திட்டமிட்ட சதி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக அணிகளுக்கு இடையிலான சின்னம் குறித்த வழக்கை வேகவேகமாக முடித்து இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகளுக்கு சின்னத்தை ஒதுக்குகிறது தேர்தல் ஆணையம். சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாள் ஆர்.கே.நகர் தேர்தலையும் அறிவிக்கிறது ஆணையம்.

இதையெல்லாம் எதார்த்தமாக நடப்பதாக நம்பவைக்க பாஜகவும் மீடியாக்களும் முயன்றாலும், பதார்த்தமாக நம்ப படித்தவர்கள் தயாராக இல்லை.

இதோ, தினகரனுக்கு தொப்பிச் சின்னம் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஏராளமான சுயேச்சைகள் களத்தில் இருக்கிறார்கள். தீபாவும், விஷாலும் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். வேட்பு மனு பரிசீலனையில் தீபா மனு நிராகரிக்கப்படுகிறது. தன்னை முதல் நாள் மிரட்டியதாக தீபா சொல்கிறார். வேட்பு மனுவின் ஒரு பக்கத்தையே நிரப்பாமல் கையெழுத்தும் போடாமல் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் தீபா.



ஆனால், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுதான் தேர்தல் ஆணையத்துடன் ஆளும் அதிமுக நடத்திய டகால்டி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. விஷால் மனுவை பரிசீலிக்க தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்படுகிறது. பின்னர் மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இரவு 11 மணிக்கு விஷாலின் மனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரி அறிவித்துள்ளார்.

ஆக, இந்த மொத்த நிகழ்ச்சியிலும் அதிகாரியை யாரோ ஆளுந்தரப்பினர் வழிநடத்தி இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி பகிரங்கமாக ஒரு மோசடியை நடத்தி, அதையே காரணமாக காட்டி ஆர்.கே.நகர் தேர்தலை மீண்டும் ரத்து செய்ய ஏற்பாடு செய்கிறார்களோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

- ஆதனூர் சோழன்
படம் - அசோக் குமார்

சார்ந்த செய்திகள்