Skip to main content

உங்கள் முதுகுக்குப் பின்னால்...

Published on 18/01/2018 | Edited on 18/01/2018
உங்கள் முதுகுக்குப் பின்னால்...

ஒரு மனிதன் தன் வாழ்வில் சற்றேறத்தாழ பத்தில் ஒரு மடங்கு நேரத்தை பயணங்களில் செலவளிக்கிறான் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. அலுவல் நிமித்தமும் அன்பின் நிமித்தமும் அலைவதென்பதே வாழ்வியல்க்கூறாய் மாறிவிட்ட சூழலில், பயணங்களைத் தவிரத்தலென்பது இயலாத ஒன்று. ஆண் பெண் பேதமின்றி பொருளாதாரத்தேடல் அவசியமாகிப்போன காலச்சுழற்சியில் நம் காதுகளை அடிக்கடி எட்டும் வார்த்தை, 'முதுகுவலி'. 



ஆயிரமாயிரம் மைல்கள் குதிரையில் பயணித்து, போர்செய்து, கங்கை முதல் கடாரம் வரை வென்ற பாரம்பரியமும் படைத்திறனும் கொண்ட மரபில் வந்த தமிழ்ப்பெருங்குடியின் அத்தனை பிள்ளைகளும் இன்று ஒட்டுமொத்தமாய்ச் சொல்லும் வார்த்தை, “முதுகு வலி”. கரடுமுரடான சாலைகள், மலை முகடுகள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடமும் அலைந்து திரிந்த காலத்தில் நம் முன்னோருக்கு சாத்தியமான வலியில்லா வாழ்வியல் ஏன் நமக்கு சாத்தியப்படவில்லை? இத்தனைக்கும் ஷாக் அப்சர்வர் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் இந்த அறிவியல் யுகத்தில் எப்படி வருகிறது இத்தனை வாயில் நுழையவே முடியாத அளவிலான வலிகளின் பட்டியல்?! அண்டை மாநிலங்கள் தொடங்கி உள்ளூர் சமஸ்தானங்கள் வரை நடந்தும், ஓடியும், குதிரையிலும், குதிரை வண்டியில் பயணித்தும்; அத்தனை மன்னர்களின் ஆதரவையும் திரட்டி வெள்ளையனை எதிர்த்து போர்க்களத்திலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்த நம் சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு வராத முதுகுவலி இன்று ஒரு வீட்டுக்கு குறைந்தது 3 பேரையாவது பாடாய்ப் படுத்துகிறது. 

எங்குதான் தொடங்கின இத்தனை பிரச்சனைகள்?

அன்றைய நம் முன்னோர்களின் வாழ்வியலை நாம் முற்றிலும் மறந்துபோன நிமிடத்திலிருந்துதான் ஆரம்பித்தது அத்தனை பிரச்சனையும். அன்றைய உணவுமுறை மறந்து போனது நமக்கு. ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் தினமும் நீச்சல் அடித்து குளித்தல், சிலம்பம், மல்யுத்தம், மரம் ஏறுதல் என அனைத்தையும் மறந்து தொலைத்தோம். ஆறு, குளங்களை தொலைத்துவிட்ட பிறகு எங்கு நீச்சல் அடிப்பது? 

பொதுவாக அனைத்து மூட்டு வலிகளுக்குமான முக்கிய காரணம் தசை மற்றும் எலும்புகளில் வலு இல்லாமல் இருப்பதே. உடற்பயிற்சியும் இல்லாமல், தரம்கெட்ட உணவையும் உட்கொண்டால் வலியில்லாத வாழ்வு சாத்தியம் இல்லை. தினமும் முறையான உடற்பயிற்சி, பளு தூக்கும் பயிற்சிகள் செய்து வந்தாலே வலியை விரட்டிவிடலாம். எலும்பு வலுபெற எடைதூக்கும் பயிற்சியும், சூரிய ஒளியும் முக்கியத்தேவைகள். தசை மற்றும் தசைநாரில் ஏற்படும் பாதிப்பு, எலும்பு வட்டுகள் எனப்படும் டிஸ்க்குகளில் ஏற்படும் முறிவு, ஆர்திரிட்டிஸ் எனப்படும் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு வலுவிழத்தல் ஆகியவையே முதுகுவலிக்கு காரணங்கள் ஆகின்றன. வயது காரணமாய் உண்டாகும் முதுகுவலி தவிர; உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, முறையற்ற வகையில் பளு/எடைதூக்குதல், புகைபிடித்தல் மற்றும் மனோவியல் காரணிகள் ஆகியவையும் முதுகு வலியின் வீரியத்தை அதிகரிக்கின்றன. 

முதுகு வலியைத் தவிர்க்க சில வழிகள்: 



1. முறையான உடற்பயிற்சி 

2. நீண்ட நேரம் நிற்க நேர்கையில் முதுகுத்தசைகளுக்கு அயர்ச்சி ஏற்படாவண்ணம் இடுப்பின் சமநிலை சரியாக இருக்குமாறு (நியூட்ரல் பெல்விக் பொஸிஷன்) நின்று பழக வேண்டும். அதாவது இடுப்பை வளைக்காமல் நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும். 

3. அமரும்போது நிமிர்ந்தும் முதுகுக்கு சரியான சாய்வு கிடைக்கும் விதமாகவும் இடுப்பு முழங்கால்கள் சரியான ஓய்வு நிலையில் இருக்குமாறும் கவனித்துக்கொள்தல் அவசியம். 

4. நீண்டநேரம் அமரவேண்டிய சூழ்நிலையில் அடிக்கடி அமர்ந்திருக்கும் நிலையை சற்றே மாற்றிக்கொள்ளுதல் நலம். 

5. எடை தூக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது முதுகை வளைக்காமல் முழங்கால்களை வளைத்து அதன்பின் எடையைத் தூக்கவேண்டும்.

வாழ்வின் ஓட்டத்தில் ஆற அமர இருந்து உணவு உண்ணும் வழக்கம் மாறிப்போய், துரித உணவையும் பானங்களையும் உண்டு பழகிவிட்டோம். நாம் மறந்தே போன நம் பாரம்பரிய உணவுமுறை நமக்கு கற்றுக் கொடுத்த சரிவிகித உணவு (Balanced Diet) வழக்கம் மற்றும் கலப்பு உணவு (Mixed Diet) வழக்கம் ஆகியவை வழக்கொழிந்து போனதன் விபரீத விளைவுதான் இந்த வலிகள் எல்லாம். 



வலி வந்தபின், வலிநிவாரணிகள் உடனடி நிவாரணம் தந்தாலும் இயன்முறை மருத்துவ சிகிச்சையே எந்த பக்கவிளைவுமற்ற பாதுகாப்பான சிகிச்சையை வழங்குகின்றன. தீவிர வலியும் மூட்டு வீங்கி செயல்பாடுகள் முற்றிலும் குறைந்த சூழல் ஏற்பட்டால் கட்டாயம் ஒரு எலும்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கிய தேவையாகிறது. வலி வருவதற்கு முன்பே நம் விழிகளைத் திறந்து நம் தமிழ் பாரம்பரிய வாழ்வியலை உணர்ந்தால் வலியில்லா வாழ்வு வசப்படும். 



டாக்டர். டேனியல் ராஜசுந்தரம்
மயோபதி ஆராய்ச்சி மையம், நெல்லை   
ஜீவன் அறக்கட்டளை

சார்ந்த செய்திகள்