Skip to main content

இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?

Published on 17/01/2018 | Edited on 17/01/2018
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?  

ஹஜ் மானிய ரத்து - ஆதரவும் எதிர்ப்பும்   





ஹஜ் பயணம் இசுலாமியர்கள் செய்யவேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்று. இந்தியாவில் பல  மத்திய, மாநில அரசுகள் ஹஜ் மானியம் வழங்கி வருகின்றன. இந்த நிதி கிட்டத்தட்ட 650 கோடியிலிருந்து 700 கோடிவரை இருக்கும். இந்த நிலையில் நேற்று 'ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டது' என்ற செய்தி வெளியானதும், 'இது சிறுபான்மையினர் மீதான மத்திய  பா.ஜ.க அரசின் அடுத்த தாக்குதலோ என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டது, இணையத்தில் விவாதங்கள் நடக்கத் தொடங்கின. ஆனால் இந்த மானிய ரத்து இன்று, நேற்று திட்டமிடப்பட்டதல்ல. ஹஜ் பயணத்திற்குத்  தரப்படும் மானியத்தை படிப்படியாக 2022ற்குள் நிறுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் 2012லேயே தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஒரே அடியாக நிறுத்தப்பட்டுள்ளது.



முக்தர் அப்பாஸ் நக்வி - அசாதுதீன் ஒவைசி



  இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியது... "மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி அதன்மூலம் வாக்கு வாங்கி அரசியலில் ஈடுபட மத்திய அரசு விரும்பவில்லை. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி,கௌரவத்துக்கு மட்டுமே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானியத்தில் ‘ஏர் இந்தியா’ நிறுவனமே அதிகம் பயனடைகிறது. யாத்ரீகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் இல்லை. இந்த ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் வழங்கப்படாது. அதேநேரம் இந்த மானிய நிதி, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகப்  பயன்படுத்தப்படும். குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்விக்காக செலவிடப்படும். கடந்த 2012ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வரும் 2022ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படியே தற்போது ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் சுமார் 8.5 லட்சம் சிறுபான்மையின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 1.83 கோடி இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி மேலும் பயனுள்ளதாக இருக்கும். வரும் 18ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் விழாவில் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும். இதில் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள்" என்று கூறினார்.




சமூக வலைத்தளங்களிலும் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் இசுலாமியர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர். 'ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்படும் மானியத்தை, சாதாரணமாகச் சென்று வருவதற்கும் பெரியதாக வித்தியாசம் இருப்பதில்லை. மேலும் ஹஜ் மானியத்தின் மூலம் செல்லுவதை விட, அதே தொகையில் தனியார் மூலம் செல்லும்போது சொகுசாகச் செல்லலாம்' எனவும் ஹஜ் பயணம் செய்த சில இசுலாமியர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, ஹஜ் மானிய ரத்தை  தான் வரவேற்பதாகவும், ஆனால் இதேபோல் காசி, அயோத்தி போன்ற யாத்திரைகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையும் ரத்து செய்யமுடியுமா என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். மானிய ரத்தால் சேமிக்கப்படும் நிதி, இசுலாமியர்களுக்கு சரியாக சென்றடைய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். 

மாட்டிறைச்சிக்குத் தடை, முத்தலாக் தடைச்சட்டம் என இசுலாமியர்களின் கலாச்சாரத்தில் கை வைப்பதாகவே அமைந்து வரும் மத்திய அரசின்  நடவடிக்கைகளில் அடுத்ததாக இருக்குமோ என்று  சந்தேகிக்கப்படுகிறது ஹஜ் மானிய ரத்து. அதிலும் பாஜக ஆட்சியில் இவை நடப்பதால் சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. ஆனால், ஹஜ் மானிய ரத்து பற்றி அதிக எதிர்ப்பில்லாத நிலையில், அந்த நிதியை சரியாக  முழுமையாக சிறுபான்மையினரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டியது  மத்திய அரசின் கடமையாகிறது. அது நடக்குமா என்ற கேள்வி வருங்காலத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறது.

கமல்குமார் 

சார்ந்த செய்திகள்