2ஜி தீர்ப்பை கேட்டவர்களுக்கு அதிர்ச்சி: நாஞ்சில் சம்பத் பேட்டி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,

இந்தியாவை உலுக்கிய ஊழல், இந்தியாவினுடைய பாதுகாப்புக்கே அறைகூவல் விடுத்த ஊழல், காணாமல் போன பணம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என மலைக்க வைத்த ஊழல், அந்த குற்றச்சாட்டில் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி இன்றைக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்கள் எல்லோரையும் விடுவித்திருக்கிறது.
விடுவித்தவர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் இந்த தீர்ப்பை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். என்றைக்கு பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கலைஞர் வீட்டுக்கு வந்தாரோ அன்றைக்கே இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொண்டார்கள்.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், பத்திரிகை எல்லா இடங்களிலும் ஜனநாயகம் செத்து கீழே விழுகிறது. பணநாயகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்த தீர்ப்பு சாமானிய மக்களுடைய மகிழ்ச்சியை மறைத்துவிட்டது. இவ்வாறு கூறியுள்ளார்.
-வே.ராஜவேல்