மீட்புப்பணியில் இருந்த தந்தைக்கு மகள் எழுதிய உருக்கமான கடிதம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல இடங்களில் ஹரிக்கேன் புயலால் கனமழை பெய்தது. இது அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மழையைக் கொட்டித் தீர்த்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப்படையினரின் பணி அளப்பரியது.

இதில் ஹார்வி பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப்படை வீரர் ஒருவரின் மகள், அவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்ஜண்ட் ஸ்காட் ஹால்ட் என்ற அந்த காவலரின் மகள், அவரது பணியின் முக்கியத்துவம் குறித்து அவர் அந்த நெகிழ்ச்சியான கடிதத்தை எழுதியிருந்தார்.
அதில், ‘அன்புள்ள அப்பா, நீங்கள் பாதுகாப்புடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், உங்களை விட மற்றவர்களின் பாதுகாப்பில் தான் நீங்கள் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இதற்கு மேல் யாரும் காயப்பட்டு விடக்கூடாது. ஹரிக்கேனில் இருந்து அனைவரையும் மீட்டு மீண்டும் எங்களிடம் வாருங்கள். லவ் யூ!’ என எழுதியிருந்தார்.
உணர்ச்சிமிகுந்த இந்தக் கடிதம் காவலர்கள் அனைவரின் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ச.ப.மதிவாணன்