
அண்மையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அதில், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்துநதி நீர் பங்கீடு தடை உள்ளிட்ட முடிவுகளை எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் வான்வெளியை இந்தியா பயன்படுத்த தடை, சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தானும் எடுத்தது. இரு நாடுகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பஹல்காம் தாக்குதலை அடுத்து, கடந்த 5 நாட்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மே முதல் வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, அடுத்த 24-36 மணி நேரத்தில் இஸ்லாமாபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ‘பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், எல்லைப் பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் உயர் அதிகாரியிடம் இந்திய ராணுவ உயர் அதிகாரி தொலைப்பேசி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.