Skip to main content

புதிய கல்வித்கொள்கையை எதிர்த்து திருச்சியில் பிரமாண்ட மாநாடு ! 

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வலுத்து வருகிறது. கருத்து கேட்புக்கு நாட்கள் நீட்டித்து தமிழகத்தில் இருந்து எழுந்த குரலை அடுத்த 15 நாட்கள் நீட்டிப்பு கொடுத்தார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு திருச்சியில் 23ம் தேதி மிக பிரமாண்டமாக நடக்கிறது.

 

t

 

இதுகுறித்த திருச்சி பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கௌரவ தலைவர் தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  ‘’ முந்தைய தேசிய கல்வி கொள்கைக்கும் இப்போது கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கைக்கும் வேறுபாடு உள்ளது. தற்போது கல்வியை அரசியலின் கீழ் கொண்டு வந்துள்ளனர். பிரதமர் தலைமையிலான குழுதான் கல்வியை தணிக்கை செய்ய உள்ளனர். 

 

கல்வி என்பது படைப்பிற்கு முக்கியமானது. கல்வி கலாச்சாரத்தின் முக்கிய அம்சம். இதனை அரசியல் தலைவர் கீழ் கொண்டு வருவது சரியல்ல. மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வது கூட்டணி தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சிக்காக போரடிய நாம் இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 

 

புதிய கல்வி கொள்கையின் மூலம் மாநிலங்கள் கல்வியில் தங்களுக்கான சுதந்திரத்தை இழந்துவிடுவர். பாடத்திட்டங்களை மொழி பெயர்க்கும் வேலையைத் தான் செய்ய வேண்டி இருக்கும்.

மேலும் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்சி நிறுவனங்களை ஒழிக்கும் செயலை செய்ய உள்ளனர். பல்கலைகழகங்களை தவிர்த்து கல்லூரிகளே தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கலாம் என்கின்றனர். இது தனியார் மயத்திற்கு வழிவகுக்கும் மேலும் கல்வி தரம் கேள்விகுறியாகும். புதிய கல்வி கொள்கையின் ஒட்டுமொத்த அறிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். இதில் மொழி, மதம் மட்டுமல்ல அனைத்துமே பிரச்சனை தான். 

 

இந்த கல்வி கொள்கையால் வருங்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகும் நிலை உள்ளது. இதற்கான போராட்டத்தை நடத்தாவிட்டால் அடுத்த சந்ததியினர் நம்மை மன்னிக்கமாட்டார்கள். 

 

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கிறார்கள் கருத்து கூறினால் ஏற்க மறுத்து கோபப்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கேரளாவில் வீடு, வீடாக நோட்டிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ராஜஸ்தானில் அரசே ஏற்க மறுக்கிறது. டெல்லியில் ஆராய்ச்சியாளர்கள் போராடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நோட்டிஸ் கொடுக்க கூட போலீசார் கெடுபிடி காட்டுகின்றனர்.

 

ஆசிரியர், பெற்றோர் கழகம் மூலம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப்பெரிய இயக்கத்தை நடத்த வேண்டும். மக்களை நம்பினால் மாற்றம் நிச்சயம். இந்த மாநாட்டை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன்ரெட்டி துவக்கி வைத்து உரையாற்றுகின்றார். 

 

மாநாட்டில் திருச்சியிலிருந்து வரும் மொழிப்போர் தியாகி சின்னசாமி நினைவுச்சுடர், புதுக்கோட்டையில் இருந்து வரும் மருத்துவர் முத்துலட்சுமி நினைவு பெண் கல்விச்சுடர், பெரம்பலூரிலிருந்து வரும் அனிதா, கீர்த்தனா நினைவு நீட் எதிர்ப்புச்சுடர்கள் ஏற்றப்பட உள்ளன. மேலும் தேசிய கல்வி கொள்கை 2019 பின்னணியின் மர்மங்கள் என்ற நூலை வெளியிட உள்ளோம்’’ என்றார்.

 

பேட்டியின் போது வரவேற்புக்குழு செயல் தலைவர் கவிஞர் நந்தலாலா, திருச்சி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.