Skip to main content

போலீசார் தேடி வரும் நிலையில் விழா ஒன்றில் பாஜகவினருடன் கலந்து கொண்ட எஸ்.வி.சேகர்

Published on 14/05/2018 | Edited on 14/05/2018


 

svsekar


நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 

இந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுக்கனை நீதிபதிகள் நிராகரித்தனர். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
 

எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு விரும்பவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். எஸ்.வி.சேகரின் உறவினரான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். 
 

இந்தநிலையில் சென்னையில் சனிக்கிழமை நடந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்