Skip to main content

இனி கிராமங்கள்தோறும் கண்காணிப்பு காவல் அலுவலர்கள்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Surveillance police in every village - IG Action

 


குற்றங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைக் காவல்துறை கையாண்டாளும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. ஒருகால கட்டத்தில் குற்றம் செய்பவா்கள் என்ற பட்டியல் மட்டும் வைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், இன்று திரும்பிய பக்கமெல்லாம் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

 

நகரப் பகுதிகளில் காவல்நிலையங்கள் இருந்தாலும், காவலா்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. ஆனால் கிராமப் புறங்களில் அதற்கான வாய்ப்பு என்பது குறைவு, எனவே புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கிராம கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தில் நடக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் காவல்துறையினா் வருவதற்கு முன்பு, இந்த அலுவலா் சென்று பிரச்சனைகளைக் களைய நடவடிக்கை எடுப்பார்.

 

அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் காவல் சரகம் பனையகுறிச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்திற்கான கண்காணிப்பு அலுவலரான காவலர் பாலாஜி என்பவரை மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் ஊர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.  


இவா்களுடைய பணி குறித்து ஐ.ஜி. ஜெயராம் பேசுகையில், "காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலரை நியமித்து அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், ஊரில் உள்ள சிறு சிறு பிரச்சினைகளை உடனடியாகக் கையாளுதல், ஊர் மக்களுடன் நல்லுறவை வளர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்று கூறினார்.

 

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.ஜெயராம், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மேலும், இந்த அறிமுக விழாவிற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி.சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

 

 

சார்ந்த செய்திகள்