Department of Education gave good news to students

Advertisment

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்திருந்தது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் இணைந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.