Skip to main content

அந்தரங்கமும் அடிப்படை உரிமையே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
அந்தரங்கமும் அடிப்படை உரிமையே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு 

அந்தரங்கமும் அடிப்படை உரிமையே உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"அந்தரங்கம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான். அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21 பாகம் 3ன் கீழ்  பாதுகாக்கபட்டிருக்கும் உரிமைகளில் ஒன்றாக குடிமக்களின் அந்தரங்கம் என்பதும் உள்ளது" என உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு இன்று ஒருமனதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். 

ஆதார் அட்டையோடு குடிமக்களின் பல்வேறுவிதமான விவரங்களையும் இணைக்கும்படி கட்டாயப்படுத்துவது அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்று தொடரப்பட்ட வழக்கின் ஒரு அங்கமாகத்தான் இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இது சர்வாதிகாரத்தைச் சட்டப்பூர்வமானதாக ஆக்குவதற்கு மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு மரணஅடியாகும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஆதார் தொடர்பான தனது அடாவடித்தனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும். குடிமக்களின் உரிமைகளைப் பறித்து சர்வாதிகார ஆட்சி நடத்தலாம் என நினைத்தால் அது நடக்காது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சான்றாகும். இதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கியதோடு மட்டுமின்றி ஆதார் தொடர்பான வழக்கிலும் குடிமக்களின் உரிமையை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என நம்புகிறோம். இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கும் எமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்றோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்