Skip to main content

திமுகவின் திட்டத்தை முறியடிக்கவே முதல்வருக்கு ஆதரவு- ஜக்கையன் எம்.எல்.ஏ

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
திமுகவின் திட்டத்தை முறியடிக்கவே முதல்வருக்கு ஆதரவு- ஜக்கையன் எம்.எல்.ஏ

தினகரன் ஆதரவு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவு இல்லை என அறிவித்த 19 எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஜக்கையன் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி, முதல்வர் எடப்பாடிக்கு தன் ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

இப்போது ஏற்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனை. இந்த பிரச்சனை ஏற்பட்ட சமயம் நான் எடுத்த முடிவின் பிரகாரம், நான் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டேன். அப்போது, இந்த பிரச்சனையை கவர்னரிடத்திலே கொண்டுசெல்லலாம் என டிடிவி தினகரன் முடிவெடுக்கும் போது, இது நம் கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை; கட்சிக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறினேன். 

பின்னர், அவர் கேட்டுக்கொண்டதன் படி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்து வந்தோம். அதன்பின்னர் சில நாட்களாக நடக்கும் விஷயங்கள், அதிமுக எனும் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனையை திமுக பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறதா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 

எனவே, பெரும்பான்மை உள்ள ஒரு அணியில் இணைந்து வலுசேர்த்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றும், இதில் தலையிட முயலும் திமுகவின் திட்டத்தை முறியடிக்கவுமே இந்த நிலைப்பாடை எடுத்தேன். எனது நிலைப்பாடை ஏற்கனவே டிடிவி தினகரனிடமும் தெரிவித்திருக்கிறேன். இது நான் சுயமாக எடுத்த முடிவு. மேலும் சில நண்பர்கள் நல்ல முடிவுகள் எடுப்பார்கள் என நம்புகிறேன். 

சார்ந்த செய்திகள்