Skip to main content

சேலம் மாநகராட்சிக்கு எதிராக வரி கொடா போராட்டம்! அருண் நகர் மக்கள் போர்க்கொடி!!

சாக்கடைக் கால்வாய், சாலை வசதிகள் செய்து கொடுக்காத சேலம் மாநகராட்சிக்கு எதிராக வரி கொடா போராட்டம் நடத்துவோம் என அருண் நகர், நியூ அருண் நகர், ராஜராஜன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.


அண்மையில் தொடர்ச்சியாக பெய்து வரும் பருவமழை, சேலம் மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை (!) சல்லி சல்லியாக பெயர்த்தெடுத்து உலகுக்குக் காட்டியிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் சாலையில் மழைநீரும், கழிவு நீரும் இரண்டறக் கலந்து குளம் குளமாகத் தேங்கியிருக்கிறது. ஆனால், லேசான மழைக்கே தாங்காத பல பகுதிகள், ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்ட சேலம் மாநகரில் இன்னும் இருக்கின்றன.

salem district peoples safer not get basic facilities


சேலம் மாநகராட்சி கேஎம்எஸ் கார்டன் அருகே, 5வது கோட்டத்திற்கு உட்பட்ட அருண் நகர், நியூ அருண் நகர், ராஜராஜன் நகர், முருகன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 20 ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாகச் சொல்கின்றனர். அப்பகுதி மக்களின் அழைப்பிற்கிணங்க நாம் சென்று பார்வையிட்டோம். 


மேற்சொன்ன எந்த ஒரு பகுதியிலும் இதுவரை உள்ளாட்சி நிர்வாகத்தால் சாக்கடைக் கால்வாய் வடிகால் வசதி செய்து தரப்படாதது தெரிய வந்தது. இங்குள்ளவர்களில் பெரும்பான்மையினர் மேல்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முக்கால்வாசிப்பேர் அரசு ஊழியர்கள்; ஓய்வு பெற்றவர்கள். ஆனாலும் அவர்கள் போராடாமல் இல்லை. சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு ஆண்டுக்கு முன்பு நேரடியாக கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.


இதுகுறித்து அருண் நகர், நியூ அருண் நகர், முருகன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், செங்கோட்டுவேல், பாலசுப்ரமணியம், பானுமதி, கவிதா, ஹரிகுமார் ஆகியோர் கூறுகையில், ''மழைக்காலம் வந்தாலே இந்தப் பகுதியில் சாலையில் யாரும் நடந்து செல்லவே முடியாது. முழங்கால் அளவுக்கு மழைநீரும், சாக்கடைக் கழிவுநீரும் தேங்கி நிற்கும். ஏற்காடு மலையில் இருந்து வரும் மழைநீர், கேஎம்எஸ் கார்டன் பகுதியில் உள்ள ஓர் ஓடையில் கலக்கிறது. அந்த ஓடை வழிந்து சாக்கடை நீருடன் கலந்து இங்குள்ள ஒரு காலி மனைகளில் நிரம்புகிறது. 

salem district peoples safer not get basic facilities


அவற்றில் இருந்து சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீர் தேங்குகிறது. இதுவரை சாக்கடைக் கால்வாய் வசதி செய்து தரப்படாததால், சாலையில் கழிவு நீர் பல நாள்களுக்கு தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். சில நாள்களுக்கு முன்பு வந்த ஊழியர்கள் சிலர், சாலையின் குறுக்கே வாய்க்கால் போல வெட்டிவிட்டுச் சென்றனர். அதன்பிறகு இந்த சாலை வழியாக வாகனப் போக்குவரத்து முடங்கிவிட்டது. நடந்து செல்லும் பெண்கள், வயதானவர்கள் இந்த சாலையில் வாய்க்காலை தாண்டி வர ரொம்பவே சிரமப்படுகின்றனர்.


பாதாள சாக்கடைக்காக குழிகள் வெட்டப்பட்டு சிமெண்ட் மூடி போட்டு மூடியுள்ளனர். மழைக்காலங்களில் அந்த குழிகளில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் பல அடி உயரத்திற்கு குபுகுபுவென்று வெளியேறும். இன்னும் பாதாள சாக்கடைக் குழிக்கும், வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கப்படவில்லை. முதலமைச்சரின் சொந்த மாவட்டமாக இருந்தும் இத்தனை துயரத்தை நித்தமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
 

salem district peoples safer not get basic facilities


ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுமையும் வயல்வெளியாக இருந்தது. இந்த நகர்கள் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வந்துவிட்டன. எல்லா வீடுகளிலும் உறிஞ்சு குழி (சோக் பிட்) மூலம்தான் கழிவுநீரை அப்புறப்படுத்தி வருகிறோம். சேலம் மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி என எல்லா வரிகளும் காலம் காலமாகச் செலுத்தி வருகிறோம். இனியும் எங்களுக்கு போதிய சாலை வசதி, சாக்கடைக் கால்வாய் வசதிகள் செய்து தராவிட்டால், நாங்கள் மாநகராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம். மக்களை ஒன்றுதிரட்டி வரிகொடா போராட்டம் நடத்துவோம்,'' என்றனர்.


பானுமதி மனோகரன் என்பவர், ''ஒவ்வொரு வீட்டு முன்பும் மழைநீர் தேங்கியதால், வடிந்து ஓடுவதற்கு வசதியாக மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளையொட்டி நான்கு அடி ஆழத்திற்கு வாய்க்கால் வெட்டிவிட்டுச் சென்றனர். ஆனால், மழை நின்றதும் அந்த வாய்க்கால் குழியை நீங்கள்தான் மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கின்றனர். மேலும், அவரவரே சொந்த செலவில் இந்த வாய்க்காலில் சிமெண்ட் குழாய்கள் பதித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். 


நாங்களே அந்த வேலைகளைச் செய்வது எனில், எதற்காக மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்? வீட்டு முன்பு வெட்டப்பட்ட வாய்க்காலால் கார் உள்ளிட்ட வாகனங்களை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் உள்ள இந்த வாய்க்காலில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது,'' என்றார். 

salem district peoples safer not get basic facilities


நியூ அருண் நகரின் மற்றொரு பகுதியில் திறந்தவெளியில் பாசம் படிந்து தேங்கிக் கிடக்கும் நீர், டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் ஆலையாக இருப்பதைக் காண முடிந்தது. அங்குள்ள காலி மனைகளின் உரிமையாளர்கள் யார் என்பது பற்றி அப்பகுதி மக்களுக்கே சரியாகத் தெரியவில்லை. அங்கே இன்னும் ஓர் ஆபத்தும் இருக்கிறது. 


''இந்தப் பகுதியில் திறந்தவெளியில் தனியாருக்குச் சொந்தமான ஒரு விவசாயக்கிணறு உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அந்தக் கிணறு தரை மட்டம் அளவுக்கு நிரம்பி வழிகிறது. மழை வந்தாலும் வராமல் போனாலும், சுற்றுச்சுவரோ, மூடியோ இல்லாத அந்தக் கிணற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் 4 சிறுவர்கள் தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள். யாராவது இறக்கும்போது காவல்துறையினர் வந்து பார்த்துவிட்டு, கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், இதுவரை யாரும் அதற்கான ஒரு சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை.
 

salem district peoples safer not get basic facilities


திறந்தவெளியில் எப்போதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. அடிக்கடி பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து சிலர் வெளியேற்றும் கழிவு நீர் நீண்ட நாள்களுக்கு தேங்கிக் கிடக்கிறது. உயிர்ப்பலி வாங்கும் இந்த கிணற்றை மூடுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்கிறார் நியூ அருண் நகரைச் சேர்ந்த சுதா.


எனினும், எல்லா குறைபாடுகளுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை மட்டுமே மக்கள் முற்றாக குறைசொல்லி விட முடியாது. இக்குற்றங்களில் மக்களுக்கும் கணிசமாக பங்கு இருக்கவே செய்கிறது. திறந்தவெளி கிணறு இருப்பதாகச் சொல்லப்படும் பகுதியில் வழக்கறிஞர்கள் கணிசமாக வசிக்கின்றனர். அவர்களில் ஒருவர்கூட, பாதுகாப்பற்ற அந்த கிணற்றை மூட முயற்சிக்காமல் மேட்டுக்குடி மனோபாவத்துடன் ஒதுங்கி நிற்பதும் நமக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. 
 

salem district peoples safer not get basic facilities


கழிவுநீர் வடிகால் வசதி இல்லாதது, டெங்கு காய்ச்சல், சாலை வசதி குறைபாடு என குறைகளைச் சொன்னாலும், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அன்றாடம் காலையில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்துச் செல்வதாக கூறுகின்றனர். அதே அக்கறை மேற்சொன்ன புகார்களின் மீதும் செலுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஆகப்பெரும் கோரிக்கைகளாக உள்ளன.


தேர்தல் நேரத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், வரி வசூலிப்பில் ஆர்வம் காட்டும் சேலம் மாநகராட்சி நிர்வாகம், கொஞ்சம் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் காட்டினால்தான் ஸ்மார்ட் சிட்டி என்பதற்கான முழு பொருள் விளங்கும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்