Skip to main content

சென்னை வந்த சிறப்பு ரயில்; அனைவரது சிகிச்சைக்கும் ஏற்பாடு; மா. சுப்ரமணியன் பேட்டி

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Special train arrived in Chennai; Provision for treatment of all; Ma.Subramanian interview

 

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். 

 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், “ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதை நாம் அனைவரும் உணர்வோம். அந்த வகையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த ரயிலும் விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்தோடும் மாநில நிர்வாகத்தோடும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசின் மாநில அரசின் நிர்வாகங்களின் உதவியோடு செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

 

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக சென்னையில் 6 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கான 207 படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தோம். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 305 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 36 மருத்துவர்கள், 30 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் காத்திருக்கிறார்கள். 6 குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். 

 

294 பேர் நேற்று அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆங்காங்கு இறங்கி விட்டனர். இதில் சென்ட்ரலுக்கு வந்தவர்கள் 137 பேர். அதில் 8 பேர் காயமடைந்தவர்கள். அதில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். 3 பேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் பொருட்டு வருவாய்த் துறை அமைச்சர் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார். காயமடைந்தவர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை. யாருக்கும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை. ரயில் நிலையத்தில் உள்ளது போலவே சென்னை விமான நிலையத்திலும் மருத்துவர் குழு தயார் நிலையில் உள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்