Skip to main content

சைதை துரைசாமி மகன் மாயமான விவகாரம்; ரத்த மாதிரிகள் அனுப்பிவைப்பு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Saidai Duraisamy son incident samples sent

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெற்றி துரைசாமியை மத்திய பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 8 வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதன்படி சட்லெஜ் நதியில் வெற்றி துரைசாமி காணாமல் போன விவகாரத்தில், விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல எடை மற்றும் உயரம் கொண்ட மாதிரி (DEMO) பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் வெற்றி துரைசாமி எவ்வழியாக நதியில் சென்றிருப்பார் என மீட்புக் குழுவினர் சோதனை நிகழ்த்தி அவரைக் கணடறியும் முயற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதற்கிடையில் வெற்றி துரைசாமியின் உடமைகள், செல்போன்கள் ஆற்றில் கவிழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்டன. மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த பாறை பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள், விபத்து நிகழ்ந்த இடத்தில் சேகரித்த ரத்த மாதிரி பரிசோதனை குறித்த டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

இந்நிலையில் மூளை திசுக்கள் வெற்றி துரைசாமியுடையதா என கண்டறிய அவரின் பெற்றோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி சைதை துரைசாமியின் ரத்த மாதிரிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ரத்த மாதிரிகள் இமாச்சலப்பிரதேச ஆய்வு கூடத்திற்கு அனுப்பபட்டுள்ளது. இதன் மூலம் சைதை துரைசாமியின் ரத்த மாதிரிகளின் டி.என்.ஏ.வை ஒப்பிட்டு ஆய்வு செய்தபின்னர் அது வெற்றியின் மூளை திசுவா என தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்