Skip to main content

விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம்: ராமதாஸ் கண்டனம்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
vijayabaskar



காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில்  இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை. சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டவிரோதமாக குட்கா போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பி வைத்துள்ளது. இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
 

சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமானவரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016&ஆம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார். ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும்  ஒரே மாதிரியான அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மற்றும் நின்றுவிடவில்லை; அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.
 

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது  வீட்டில் வருமானவரித்துறையும், சிபி.ஐயும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன. இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது.  இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறை தானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.
 

காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள  விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில்  இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட  குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சிபிஐ தண்டனை பெற்றுத்தர  வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.