Skip to main content

பெரியார் பல்கலை கழகத்தில் மீண்டும் சேர்ந்தார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
பெரியார் பல்கலை கழகத்தில் மீண்டும் சேர்ந்தார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி

சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்தவர் மாதையன். விசைத்தறி தொழிற்கூட உரிமையாளரான இவருடைய மகள் வளர்மதி. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல், மக்கள் தொடர்பியல் துறையில், முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இடதுசாரி கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட மாணவி வளர்மதி, இயற்கை வளங்களை பாதுகாக்கும் சமூக ஆர்வலராகவும் உள்ளார். கடந்த இரண்டு மாதங்கள் முன்பாக தஞ்சை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக சேலத்தில் உள்ள கல்லூரி மாணவர்களை போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி அஸ்த்தம்பட்டி போலீஸார் வளர்மதியை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சேலம் நகர காவல் துறையிடமிருந்து மாணவி வளர்மதியை குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவி வளர்மதியை பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்து பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார்.

 இந்த நிலையில், வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து மாணவி வளர்மதி சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று விடுவிக்கப்பட்டார்.

 திங்கள்கிழமை சேலம் நான்காவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நிபந்தனை கையொப்பம் இட்டுவிட்டு, பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவி வளர்மதி, பதிவாளர் மணிவண்ணனை சந்தித்து, தான் மீண்டும் படிப்பை தொடர விரும்புவதாக தெரிவித்தார்.

அப்போது, மீண்டும் படிப்பை தொடர்வதற்கான கடிதமும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான நீதிமன்றத் தீர்ப்பு நகலையும் கொடுத்துவிட்டு படிப்பை தொடரும்படி பதிவாளர் மணிவண்ணன் கூறினார்.

இதையடுத்து கடிதம் மற்றும் நீதிமன்ற நகலை கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை முதல் படிப்பை தொடர இருப்பதாக மாணவி வளர்மதி தெரிவித்தார். மாணவி மீதான இதர போராட்ட வழக்குகளில் உள்ள வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் தண்டனை பெறாத நிலையில், அவர் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்று பதிவாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்