
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (85). இவரது பேரன் கோபால் (8) (த/பெ கண்ணன்) கோபால் உடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் உள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவன் கோபால் தாத்தாவுடன் ஆடு மேய்க்கச் சென்று வந்துள்ளார்.
இன்று சனிக்கிழமையும் தனது தாத்தாவுடன் ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். பாப்பான்குடி வயல்வெளியில் மாத்திராம்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த இடிந்த தடைமட்டக் கிணறு அருகே விளையாடிய போது கிணற்று மண் சரிந்து மாணவன் கோபால் உள்ளே விழுந்துள்ளான். சிறுவன் தண்ணீருக்குள் மூழ்குவதைப் பார்த்த அவரது தாத்தா கணேசன் பேரனை காப்பாற்ற குதித்தபோது உள்ளே சிக்கிக் கொண்டார்.
சிறிது நேரத்தில், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தாத்தாவும் பேரனும் காணவில்லையே என்று ஓடிவந்து கிணற்றுக்குள் தேடிப் பார்த்தனர். தாத்தா, பேரன் இருவரது உடல்களையும் மீட்டு கரையில் போட்டனர். தாத்தா பேரன் ஒரே நேரத்தில் உயிரிழந்த தகவல் பரவிய நிலையில் கிராம மக்கள் கூடியுள்ளனர். தகவலறிந்து சென்ற இலுப்பூர் போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தாத்தாவும் பேரனும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.