Skip to main content

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, நிவாரண உதவிகளும்தான் - மு.க.ஸ்டாலின்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

 

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, நிவாரண உதவிகளும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

"கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, 2-வது கட்டமாக, மே 3-ந் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். நோய்த் தொற்று உள்ளவர்களை முற்றிலுமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

 

vvvv



இந்நிலையில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்துள்ளது. 7 வகையான அறிவுரைகளையும் மக்களுக்கு பிரதமர் வழங்கி உள்ளார். அதே நேரத்தில், நாட்டு மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல; மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள் பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை.
 

மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் என்பதன் முழுமையான பொருள், சமூகமே முடக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான். முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப்போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப்போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே.
 

கரோனா தொற்றில் இருந்து தங்களை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கனவே அறிவித்திருக்க வேண்டும்.
 

http://onelink.to/nknapp


வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்திய சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரதமர் செய்யப்போகும் உதவிகள் என்ன?. அத்தகைய லட்சோப லட்சம் குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டாமா?
 

சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம், முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது; அதனால் அவர்களால் நிம்மதியாக வீட்டுக்குள் இருந்திட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கி இருக்க வேண்டும்.
 

“மத்திய அரசின் 2020-2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம்; இந்த ரூ.30 லட்சம் கோடியில் ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா?” என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?.

 

ggg



தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள் இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்; உங்களிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்பும் பதில்கள்.
 

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப்போகிறீர்கள்? என்பதுதான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்." இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.