Skip to main content

அதிக பிரசவம்: சேலம் மாநகராட்சிதான் 'டாப்!' 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

More births: Salem Corporation 'Top!'

 

தமிழக அளவில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிரசவங்களில், சேலம் மாநகராட்சியில் உள்ள தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகபட்சமாக 34 பிரசவங்கள் நடந்து முதலிடம் பிடித்துள்ளது.


சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் இம்மருத்துவ மையங்களில் மொத்தம் 81 பிரசவங்கள் நடந்துள்ளன. இவற்றில், தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் அதிகபட்சமாக 34 பிரசவங்கள் நடந்துள்ளன. 


தமிழக அளவில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிரசவங்களில் தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில்தான் அதிக பிரசவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு தமிழக அரசு 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. மேலும், குழந்தை நலப்பெட்டகமும் வழங்கப்படுகிறது. தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. இதுபோன்ற நலத்திட்டங்கள், விளிம்பு நிலை மற்றும் கீழ்நடுத்தர வர்க்கப் பிரிவினரை நகர்ப்புற, கிராமப்புற மற்றும் அரசு மருத்துவமனைகளை நோக்கி நகர வைத்துள்ளது. இதுவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிக்க முக்கிய காரணியாக உள்ளது.


இதுமட்டுமின்றி, தாதகாப்பட்டி பகுதிவாழ் பொதுமக்கள், இம்மையத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களின் அர்ப்பணிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்களின் எண்ணிக்கை உயர இதர காரணங்களாகும்.  


இதையடுத்து, சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் இந்த மையத்தின் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் புதன்கிழமை (ஏப். 20) சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
 

துணை மேயர் சாரதாதேவி, கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவர் அசோகன், பொது சுகாதாரக்குழுத் தலைவர் சரவணன், மாநகர நல அலுவலர் யோகானந்த், மருத்துவர் செந்தாகிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு, கவுன்சிலர்கள் முருகன், பழனிசாமி, சீனிவாசன், கனிமொழி, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்