
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஏ. சீனிவாசன், இன்று (01.06.2021) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 360 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து 150 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், நோய் தொற்று சிகிச்சைக்காக பதினைந்து படுக்கைகளும் மீதமுள்ள 135 படுக்கைகள் லேசான மற்றும் மிதமான கரோனா தொற்றுள்ள புற்றுநோயாளிகளுக்கும், மீதமுள்ள 210 படுக்கைகள் பிற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இதுவரை 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 40 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களின் அவசர தேவைக்காக மருத்துவக் கல்லூரியின் ஆம்புலன்ஸ் சேவை தயார்நிலையில் உள்ளது. எனவே தொகுதி மக்கள் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு இந்த ஆம்புலன்ஸ் சேவை செய்ய தயாராக இருக்கிறது. இதுவரை 125க்கும் அதிகமானோர் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் ராஜேஷ், சங்கர், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.