Skip to main content

தக்காளி இல்லாத சாம்பார், ரசம்...! – விண்ணைத் தொடும் விலையேற்றம்! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

high  tomato price

 

ஈரோடு பிரதான காய்கறி மார்க்கெட் நேதாஜி தினசரி சந்தை, வ.ஊ.சி. பூங்கா மைதானத்தில் இயங்கும் இந்த மார்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் பெருமளவு விற்பனைக்காக வருகின்றன. சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 

 

இதனால் மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து வரத்து குறைவாக வருவதால் இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. சென்ற வாரம் ரூபாய் 70 முதல் 80 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் தக்காளி விளைச்சல் குறைந்து போனதால் மார்கெட்டுக்கு தக்காளி வரவில்லை. தற்போது மார்க்கெட்டுக்கு ஆந்திராவிலிருந்து மட்டும் இருந்து தக்காளி வரத்தாகி வருகிறது. 

 

தினமும் 15 டன் தக்காளி வரத்தாகி வந்த இங்கு இப்போது வெறும் 4 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி வருகிறது. இதனால் 21ந் தேதி மார்க்கெட்டில் தக்காளி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100-க்கு விற்பனையானது. இதுவே சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 120க்கு விற்பனையாகிறது.  இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 130 வரை விற்பனையானது. பின்னர் அரசு விலையை குறைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தது. பின்னர் தக்காளி விலை கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று நூறு ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. சுமாராக இருக்கும் தக்காளி ஒரு கிலோ ரூபாய் 90-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூபாய் 100-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாள்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 72க்கு விற்பனையானது. அது மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூபாய் 90க்கு விற்பனையாகி வருகிறது.

 

இப்படி விலை உயர்ந்து போனதால் இப்போதெல்லாம் இல்லத்தரசிகள் சாம்பாருக்கும், ரசத்திற்கும் தக்காளி போடுவதில்லையாம்..

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேற்று உச்சத்திலே; இன்று குப்பையிலே!

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

bb

 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 200 ரூபாய் என உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த நேரத்தில் இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கும் அளவிற்குச் சென்றது.

 

தொடர்ந்து இது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது தக்காளி விலை மிகச் சரிந்து கிலோ 7 ரூபாய்க்கு விற்பது விவசாயிகளுக்கு வேதனை அளித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் சில விவசாயிகள் தக்காளியைக் குப்பையில் கொட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. அதேபோல் மார்க்கெட் பகுதியிலேயே மாடுகளுக்கு உணவாகக் கொட்டிச் சென்ற நிகழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

அதிரடியாகக் குறைந்த தக்காளியின் விலை; பொதுமக்கள் நிம்மதி

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Drastically low tomato prices The public is relieved

 

தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

 

அண்மையில் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று பெங்களூரு தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 52 ரூபாய் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று தமிழ்நாட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.