Skip to main content

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் காமராஜ்

Published on 15/07/2020 | Edited on 15/07/2020
"Gold loans for farmers not stopped in cooperative banks says minister kamaraj"

 

“கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் என்பது தவறான தகவல்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் திடீரென நிறுத்தப்படுவதாக நேற்று வெளியான தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்கியிருக்கிறது. தமிழகத்தில் மூன்று அடுக்குகளாகச் செயல்பட்டுவருகின்றன கூட்டுறவு வங்கிகள். கரோனா காலத்தில், வருமானம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் மக்களின் அவசர பணத்தேவைக்கு உதவிக்கரமாக இருந்தது கூட்டுறவு வங்கிகள்தான். கந்துவட்டிக் கொடுமையில் இருந்தும், தனியார் அடகு கடைகளின் அடாவடி வட்டியில் இருந்தும் சாமானிய மக்களை மீட்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. அதிலும் குறிப்பாக கிராமபுற, நகர்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுத்து வந்தன கூட்டுறவு வங்கிகள்.

 

இந்த நிலையில் நேற்று திடீரென, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டது பலதரப்பட்ட மக்களையும் வேதனையில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்துவந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,

 

“விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நகைக்கடனைக் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை, அது தவறான செய்தி. சில வங்கிகளில் கடன் வழங்கல் அவற்றுக்கான ஒதுக்கீட்டைத் தாண்டி இருக்கும். அதையும் தாண்டி கூடுதலாக கடன் வழங்கப்பட்டிருந்தால் நிறுத்தி இருப்பார்கள். தேவையின் அடிப்படையில் விவசாயக் கடன், விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து எந்த அச்சமும் தேவையில்லை,"  என்றார். இதில் எது உண்மை? என்பதை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் 

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Charge sheet filed against ADMK former minister

 

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் கூட்டுச் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். தற்போது அதிமுக திருவாரூர் மாவட்டச்  செயலாளராகவும், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். காமராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அமைச்சராக இருந்தபோது, அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகத் தனது பெயரிலும், மகன்கள், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரது பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

 

அதை உறுதிசெய்து அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே. இன்பன், உறவினர் ஆர். சந்திரசேகர், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ். உதயகுமார் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள ஆர். காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கடை மேலவாஸ்து தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எனத் தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

அந்த சோதனையில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் எனக் கைப்பற்றப்பட்டன. அதோடு கணக்கில் வராத ரூ. 15.50 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி விசாரணை நடந்து வந்தது. “ஊழல் தடுப்பு போலீசார் எங்களது வீட்டில் நடத்திய சோதனையில் எந்தவித ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த ரைடு நடந்தது” என அப்போது ஆர். காமராஜ் பேட்டியளித்தார்.

 

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார், திருவாரூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர். அதோடு சொத்து சேர்த்த வழக்கில் 810 பக்கத்திலான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையுடன் 18,000 ஆவணங்களும் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக போலீசார் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வட்டாரத்தில் விசாரித்தோம், “ஆர். காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் உள்ளிட்டவர்களோடு கூட்டு சேர்ந்து நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்கிற பினாமி பெயரில் இடத்தை வாங்கி அதில் அவரது மகன்களான இனியன், இன்பன் பெயரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பல்நோக்கு மருத்துவமனை கட்டியுள்ளார். 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்திருப்பது ஆதாரத்தோடு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, ஆர். காமராஜ் அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம். விரைவில் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்கிறார்கள்.

 

 

Next Story

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அலட்சியம்; வேதனையில் விவசாயிகள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

viralimalai nambampatti cooperative society bank officers related issue  

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் நம்பம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வங்கி மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அப்பகுதி பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக மத்திய கூட்டுறவு வங்கி தனபால் என்பவரும்,  செயலாளராக துரையப்பன் (பொறுப்பு) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன், நகைக்கடன், பருத்தி, கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதில் மேற்பார்வையாளர் தனபால் தாமதப்படுத்துவதாகவும் இதுகுறித்து அவரிடம் விவசாயிகள் கேட்டால் முறையாக பதில் கூறுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் இங்கு வந்து விட்டு மேற்பார்வையாளர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து நேற்று காலையிலும் வழக்கம் போல் மேற்பார்வையாளர் வராததால் ஆத்திரமடைந்த நம்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சிலர் கூட்டுறவு வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபடப் போவதாகக் கூறி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். கூட்டுறவு வங்கி அலுவலகமும் காலை 11 மணி வரை திறக்கப்படாமலேயே இருந்தது. இதனையறிந்த நம்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மற்றும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.