Skip to main content

ஆட்சிக் கலைப்பு இன்னும் சிறிது நாளில் வரமாக வாய்க்கப்போகிறது: தமிழருவி மணியன் அறிக்கை

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
ஆட்சிக் கலைப்பு இன்னும் சிறிது நாளில் வரமாக வாய்க்கப்போகிறது: தமிழருவி மணியன் அறிக்கை



கூட்டுக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து என்று நமக்கு விடியல் வரும் என்று ஏங்கித் தவமிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சிக் கலைப்பு இன்னும் சிறிது நாளில் வரமாக வாய்க்கப்போவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மக்கள் நலன் சார்ந்த சிந்தனை சிறிதும் இல்லாமல், தங்கள் சொந்த நலன் சார்ந்து அரசுக்குப் புறம்பாக, மனச்சான்றின் உறுத்தலின்றிப் பொது வாழ்வைக் கலங்கப் படுத்தத் தயங்காத மனிதர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்தால் எவ்வளவு அலங்கோலங்கள் அன்றாடம் அரங்கேறக்கூடும் என்பதை இன்றைய சூழலில் தமிழகத்து மக்கள் நேரிடையாக அனுபவத்தில் உணர்ந்து விட்டனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சி மூன்று துண்டுகளாகச் சிதைந்ததும், பதவிப் பங்கீட்டில் சமரசம் கண்டு இரண்டு அணிகள் இணைந்ததும், தனிமைப் படுத்தப்பட்ட ஓர் அணி இன்று கலகக் கொடி பிடிப்பதும் மக்கள் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதை நாடு நன்றாக அறியும். 
 
          இன்று 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து அதிகார நாற்காலியை விட்டு இறங்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஆளுநர் உடனடியாக எடப்பாடி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கட்டளை பிறப்பிப்பதைத் தவிர அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
 
          மத்திய அரசும், பா.ஜ.க.வும் முட்டுக் கொடுத்து எடப்பாடி ஆட்சியையும் அ.தி.மு.க.வையும் காப்பாற்ற முயன்றாலும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற வாழ்வியல் நியதியே வெற்றி பெற்றிருக்கிறது.  ஆட்சித் திறனோ, ஆளுமைப் பண்போ, நேர்மை உணர்வோ எள்ளளவும் இல்லாத இந்தக் கூட்டுக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து என்று நமக்கு விடியல் வரும் என்று ஏங்கித் தவமிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சிக் கலைப்பு இன்னும் சிறிது நாளில் வரமாக வாய்க்கப்போவதில் காந்திய மக்கள் இயக்கம் கடவுளுக்குக் காலத்துக்கும் நன்றி செலுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்