
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,985 ஆக பதிவாகியுள்ளது. இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,501 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 27 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,185 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,16,938 பேர் பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் ஈரோடு உட்பட 15 மாவட்டங்களில் கரோனா ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் கரோனா இறப்பு இன்று பதிவாகவில்லை. இணைநோய்கள் ஏதும் இல்லாத 7 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23 ஆம் தேதி வரை) கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மீன் கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.