Skip to main content

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Court sentences brother to life imprisonment

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது கெங்கவரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன் (50). இவருக்கும், இவருடைய அண்ணன் ஆனந்தன் (55) என்பவருக்கும் அதே பகுதியில் சில ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் தங்கள் குடும்பச் சொத்தை பங்கு பிரித்துக்கொள்வதில் பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதில் அண்ணன் ஆனந்தனிடம் தம்பி அசோகன் அடிக்கடி குடும்பச் சொத்தைப் பாகம் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுவந்துள்ளார். ஆனால் ஆனந்தன் சொத்தைப் பிரித்து தராமல் காலம் தாழ்த்திவந்துள்ளார்.

 

இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 7-9-2019 அன்று சகோதரர்களுக்குள் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அண்ணன் ஆனந்தன், தம்பி அசோகனை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அசோகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அசோகன் குடும்பத்தினர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் ஆனந்தன் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.

 

அது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், தம்பியைக் கொலை செய்த அண்ணன் ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.