Skip to main content

கடன் தகராறில் ஒருவர்  அடித்து கொலை; பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

chennai nolampoor incident

 

சென்னையின் நொளம்பூரில் கடன் தகராறில் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் சோட்டா வெங்கட். பைனான்சியரான இவர் இரண்டு பேருடன் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தன்னிடம் கடன் பெற்ற நபரை எரித்து கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார் பைனான்சியர். சோட்டாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பாபுஜி என்பவர் சோட்டாவிடம் பணம் வசூல் செய்யும் பணியில் இருந்துள்ளார். அப்பொழுது தனது முதலாளியான சோட்டாவிடம் இரண்டு லட்சத்தை கடனாகப் பெற்ற பாபுஜி, 21 கிராம் தங்க நகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கோயம்பேடு அருகே ஹோட்டல் ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்த பாபுஜியை, சோட்டா வெங்கட் அழைத்து வரச் சொன்னதாக அழைத்துச் சென்ற சிலர் பணத்தை திரும்பக் கேட்டு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். அதில் பாபுஜி உயிரிழந்து விட, அவரது உடலை அருகில் உள்ள குப்பை மேட்டில் போட்டு எரித்தது தெரியவந்தது. இந்த வழக்கானது கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக பைனான்சியர் சோட்டா வெங்கட், திலீப், சரவணன் ஆகிய மூன்று பேர் சரணடைந்துள்ள நிலையில் நவீன் என்ற மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்