Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

chennai high court on senthil balaji issue 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, கைது செய்வது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர் நள்ளிரவில் கைது செய்த அமலாக்கத்துறை காலை 8 மணிக்குத்தான் தகவல் தெரிவித்தனர் என்று பல வாதங்களை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் "செந்தில் பாலாஜியின் கைதை சட்ட விரோதம் எனக் கூற முடியாது. நீதிமன்றம் காவல் ஆணை பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கலானதால் கைது சட்ட விரோதம் இல்லை.

 

நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரிய மனு 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டப்படி ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம். கைது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என வாதிட்டார்.

 

அமலாக்கத்துறை வாதம் முடிவடைந்ததையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பதில் வாதத்தை முன்வைக்கையில், “செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியதை எதிர்க்காதது ஏன் என்று மத்திய அரசு வழக்கறிஞர் திரும்பத் திரும்பக் கேட்கிறார். கடந்த 14 ஆம் தேதியே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கூடுதல் வாதங்களை வைக்கிறோம்.

 

கடந்த 14 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்றுதான் அமலாக்கத்துறையினர் கூறினார்களே தவிர, தாங்கள் காவலில் எடுக்க வேண்டும் எனக் கூறவில்லை. நீதிமன்றக் காவல் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை. போலிஸ் காவல் கேட்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது தான் கேள்வி. காவல் துறையினருக்கு சமமாக அமலாக்கத்துறையினரை கருத முடியுமா” என வாதிட்டார். இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “முகுல் ரோத்தகி புதிய வாதங்களை தற்போது முன்வைப்பதால் அதற்கு பதிலளிக்க அமாலாக்கத்துறைக்கு அவகாசம் அளிக்க வேண்டும்” என வாதிட்டார். அதனையடுத்து முகுல் ரோத்தகி, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறி வாதத்தை நிறைவு செய்தார்.

 

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்