Skip to main content

எச். ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Supreme Court order passed on H. raja appeal 

தமிழக பாஜக நிர்வாகியான எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் எச். ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அச்சமயம் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் எச்.ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். 

Supreme Court order passed on H. raja appeal 

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ‘அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?’என எச். ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு எச். ராஜா தரப்பு வழக்கறிஞர், ‘ஆம்’ எனப் பதிலளித்தார். தொடர்ந்து எச். ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை எச். ராஜா சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்தோடு எச். ராஜா தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக நிர்வாகி எச். ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (14.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது எச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “எச்.ராஜா தெரிவித்த கருத்துகள் எந்த பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்படவில்லை. இந்த பதிவு என்பது எந்த கலவரத்தையும் தூண்டுவதாக இல்லை” எனத் தெரிவித்தார்.

Supreme Court order passed on H. raja appeal 

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “பொது வாழ்வில் இருக்கும் ஒருவர் தான் என்ன பேச வேண்டும் என்பதை கவனமாக பேச வேண்டும். இது போன்று பேசுபவர்கள் நிராகரிக்கபட வேண்டும். மேலும் எச். ராஜா தரப்பு வாதத்தை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்