Skip to main content

“விஜய்க்கு அனுதாபங்கள்...” - வைகைச்செல்வன்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

AIADMK spokesperson Vaigaichelvan comments on Vijay

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களைச் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள கூட்டரங்கில் இன்று கல்வி விருது விழா என்ற பெயரில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய், “நீங்கள் தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை நீங்க தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துவதை கேள்விப்பட்டிருக்கீங்களா. அதுதான் இப்போது நடந்துக்கிட்டு இருக்கு. நாமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நான் எதை சொல்கிறேன் என்றால் காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது. ஒரு எடுத்துக்காட்டாக 1 ஓட்டுக்கு 1000 ரூபாயை 1 அரை லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் மொத்தம் 15 கோடி ஆகிவிட்டது. இவ்ளோ கோடி ஒருத்தர் செலவு செய்தால், அதற்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்.

 

இதையெல்லாம் நீங்க யோசித்து பார்க்க வேண்டும். மேலும் பாடப் புத்தகத்தில் இது குறித்து இடம் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோரிடம் சென்று காசு வாங்கிவிட்டு ஓட்டு போட வேண்டாம் என சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அது கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டு வரவுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள். இது எப்போது நிகழ்கிறதோ அப்போது தான் உங்களுடைய கல்வி முறையை முழுமைப்படுத்தும் என்று மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

 

இந்த நிலையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், “நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவி செய்கிறார். அவர் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள். எதிர்கால வாக்காளர்களுக்கு என்று நினைத்து உதவி செய்தால் அவருக்கு அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்