Skip to main content

காங். MP, MLAக்களுடன் ஆலோசனை செய்கிறார் தினேஷ் குண்டு ராவ்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

K. S. Alagiri  - Dinesh Gundu Rao

 

நாளை (24.09.2020) சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் உள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை பல கட்டங்களாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. நாளை (24.09.2020) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் அவர்கள் நாளை (24.09.20) காலை 9.30 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வருகை புரிகிறார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்கிறார்.

 

மாலை 3 மணிக்கு தமிழக காங்கிரசின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் சார்ந்த தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

மாலை 3.30 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

Ad

 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருக்கிறது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் விளைபொருளை நியாயமான விலையில் சந்தையில் விற்பதற்கான ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் அடித்தளம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக விவசாயிகள் பெற்றுவந்த  உரிமைகள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனைக் காப்பாற்றுகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்துப் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காகவும் தினேஷ் குண்டு ராவ் அவர்களது வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

 

எனவே, திரு தினேஷ் குண்டு ராவ் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் வருகை புரிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து  ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.