/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/edappaadi-1-ni_1.jpg)
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின்நடத்துநரின்இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.
எனவே, இனியாவது இந்தத்திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)