Skip to main content

மேயர் தேர்தல் எப்போது? அமைச்சரவையில் விவாதம் !

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

 

 

மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியால் தேர்தலை நடத்த முன் வந்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதன்படி, 27 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த வருடம் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தினர். இன்னும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

 

eps



              

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்ட சூழலில், அதனை எப்படி நடத்தலாம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார் எடப்பாடி. 
 

அப்போது, ஊரக உள்ளாட்சிகளான கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்து விடலாம். அதன்பிறகு சிறிய இடைவெளி விட்டு, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தலை நடத்தலாம். மீண்டும் சிறிய இடைவெளிவிட்டு மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலை நடத்துவோம் என யோசனை தெரிவித்திருந்தார் வேலுமணி. 

 

இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் நடத்திய விவாதத்தில், ‘ இது நல்ல யோசனைதான் ‘ என தெரிவித்திருந்தனர். 



அதன்படியே, கிராம பஞ்சாயத்துகளுக்கு முதலில் தேர்தலை நடத்தியது எடப்பாடி அரசு. பல்வேறு பிரச்சனைகளையும், விதிகளையும் சுட்டிக்காட்டி திமுக தொடர்ந்த வழக்கால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இதற்கான தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. 


   

கடந்த 4-ந்தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்துவதா? அல்லது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்துவதா ? என அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்துள்ளது. அந்த ஆலோசனையின் முடிவில், 9 மாவட்டங்களுக்கான தேர்தலோடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் எனவும், துவக்கத்தில் முடிவு செய்திருந்தபடி இடைவெளி விட்டு தேர்தலை நடத்துவதை தவிர்க்கலாம் எனவும் அமைச்சர் வேலுமணி துவங்கி  அனைத்து அமைச்சர்களும் தெரிவித்திருக்கிறார்கள். 
 

இதனையடுத்து, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒட்டுமொத்த தேர்தலையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த ஒட்டுமொத்த தேர்தலையும் இரண்டு கட்டங்களாக நடத்தவும் தீர்மானித்துள்ளனர். இந்த தேர்தலை நடத்துவதற்காகத்தான் மார்ச்சுக்குள் பட்ஜெட் கூட்டத்தை முழுமையாக முடிக்க முடிவு செய்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ! 
            

 இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை முழுமையாக எதிர்கொள்ள மாவட்டவாரியாக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது அதிமுக தலைமை!


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.