Skip to main content

“கல்விதான் திருட முடியாத சொத்து; அதைச் சேரவிடாமல் தடுப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது” மு.க.ஸ்டாலின்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

“Education is an asset that cannot be stolen; Those who prevent it from joining will not achieve their goals" M.K.Stalin

 

“கல்விதான் யாராலும் திருடமுடியாத சொத்து. அதை அடையவிடாமல் தடுக்க நினைப்பவர்களது எண்ணம் நிறைவேறாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னையில் உள்ள தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, விடுதலை அடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணல் காந்தி அடிகள் கனவு கண்டார்கள். அனைவருக்கும் பொதுவான நாடாக இருக்கவேண்டும். சாதி, மத வேற்றுமைகள் இருக்கக் கூடாது. இந்தியர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற்றம் காணவேண்டும். கதர் கிராமத் தொழில்கள் முன்னேற்றம் காணவேண்டும் என்று அவர் நினைத்தார். தன்னைப் போலவே தனது சீடர்களும் இதில் ஆர்வம் கொண்டவர்களாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இப்படி வலியுறுத்திய காரணத்தால் அரசியல் எல்லைகளைக் கடந்து காந்தியடிகளுக்கு ஏராளமான சீடர்கள் உருவானார்கள். தமிழ்நாட்டில் அதிகமான சீடர்கள் உருவானார்கள். தன்னுடைய வாழ்நாளில் 22 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றவர்தான் அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள். அவரது சீடர்களில் ஒருவரான இ.எஸ்.அப்பாசாமி என்ற எலிசபெத் சொர்ணம் அப்பாசாமியால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வித்யோதயா பள்ளி.

 

1920-ஆம் ஆண்டு நீதிக்கட்சிக் காலத்தில் பள்ளிக்கூடங்கள் அதிகம் திறக்கப்பட்டன. அப்போது சட்டமன்றத்தினுடைய மேலவை உறுப்பினராக இருந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். அவரும் இ.எஸ்.அப்பாசாமியும் நண்பர்களாக விளங்கினார்கள். பெண்களுக்காகத் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கப் போகிறேன் என்று இ.எஸ்.அப்பாசாமி அம்மையார் அவர்கள் சொல்ல, முத்துலட்சுமி ரெட்டி மற்றும் அம்மு சுவாமிநாதன் போன்றவர்கள் நன்கொடைகளைத் திரட்டிக் கொடுத்து தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி.

 

இந்தப் பள்ளியினுடைய முதல் மாணவி இ.எஸ்.அப்பாசாமியின் மகளான விமலா அவர்கள். பெண்களை படிக்க வெளியில் அனுப்பக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில் பெண்களுக்காக தனியாகப் பள்ளியைத் தொடங்கி பெரும் புரட்சியின் அடையாளத்தை உருவாக்கியது வித்யோதயா பள்ளி. அந்தப் பழமைவாதக் கருத்துகளை மீண்டும் சமூகத்தில் விதைக்க சிலர் நினைக்கிறார்கள். ஆம், அப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கவேண்டும். போராடி உரிமைகளைப் பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் அந்த உரிமைகளைத் திரும்பப் பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

 

அவர்களுடைய இந்த பிழைப்புவாதக் கருத்துகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நீங்கள் நன்றாகப் படியுங்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், 'கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து!' அந்தக் கல்விச்சொத்தை நீங்கள் அடையக் கூடாது என்று திட்டம் போடுபவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது! நிச்சயம் நிறைவேறாது! நிறைவேறக் கூடாது!

 

100 விழுக்காடு படிப்பறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை நாம் நிச்சயமாக எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்திவிடாமல் கல்லூரிகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும். கல்விக்குத் தகுந்த வேலைகளில் சேர வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பல்வேறு நிலைகளில் தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளில் அவர்கள் இயங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்