
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03-05-25) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், கட்சி ரீதியான மாவட்டங்களைப் பிரிப்பது, நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நான்கு ஆண்டு திமுக ஆட்சி நிறைவு செய்யக் கூடிய நிலையில், ‘நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற தலைப்பில் 1,244 இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாக மக்கள் ஆதரவுடன் திமுக இதை எதிர்கொள்ளும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.