Skip to main content

“தலைமைக்கே சிக்கல்; பழனிசாமிக்கு வேறு வழியில்லை” - முதல்வர் ஸ்டாலின்

Published on 03/05/2025 | Edited on 03/05/2025

 

cm Stalin says Palaniswami has no choice but to surrender to the BJP

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03-05-25) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திராவிட மாடல் அரசின் ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் - மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற - இந்தியாவிற்கே ரோல் மடலாகச் செயல்படும் கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு. நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள். பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு - கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் கூடல் மாநகரில் ஜூன் 1 ஆம் நாள் கூடுகிறது. அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலுக்குக் கண்டனம் மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும்; தி.மு.க. எதிர்கொள்ளும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும். தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லாக் காலகட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் - மிரட்டல் - உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்