Skip to main content

ஆளுநர் - முதல்வரிடையே கருத்து வேறுபாடால் பணிகள் பாதிப்பு: தலைமைச் செயலாளர் பேட்டி

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
ஆளுநர் - முதல்வரிடையே கருத்து வேறுபாடால் பணிகள் பாதிப்பு: தலைமைச் செயலாளர் பேட்டி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஆளுநர் கிரண்பேடிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த விவகாரமாக இருந்தாலும் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இதில் மத்திய உள்துறை தலையிட வேண்டும் என கேட்டுள்ளேன்.

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு தற்போது விமான சேவை சிறப்பாக இயங்கி வருகிறது. ஐதராபாத்-விஜயவாடா மார்க்கத்தில் அனைத்து பயணிகள் இருக்கைகளும் முழுமையாக நிரம்பி விடுகின்றன. விரைவில் பெங்களூரு நகருக்கு விமான போக்குவரத்து சேவையை தொடங்க தனியார் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். அந்த திட்டத்தை தவிர்த்து புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளோம், இதற்காக 100 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். நிலத்தை கையகப்படுத்தினால் பணத்தை மாநில அரசு தான் தர வேண்டும் என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், 3 மாதங்களில் சீரடைந்து விடும். பணமதிப்பிழப்பு, மதுக்கடைகள் இடமாற்றல் உத்தரவு, ஜிஎஸ்டி போன்றவற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதே வேளையில் ஜிஎஸ்டி இழப்பு மத்திய அரசு மீண்டும் அளித்து விடும். இதனால் நிதி நிலை சீரடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- சுந்தர பாண்டியன்

சார்ந்த செய்திகள்