Skip to main content

மந்திரியின் மஞ்சள் துண்டு மர்மம்! -குரு பெயர்ச்சியால் ஓஹோ வளர்ச்சி!

Published on 05/10/2018 | Edited on 05/10/2018

“இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா.. இந்த ஓட்ட கண்ணாடியைப் போட்டுக்கிட்டு எப்படி துணிஞ்சி முன்னால நிக்கிறியோ?”

மன்னன் திரைப்படத்தில்  தியேட்டர் காமெடி சீனில் கவுண்டமணி ரஜினியிடம் இப்படி கேட்பார்.  

 

அதேரீதியில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்த ஒரு காரியம் இன்று நகைப்புக்கு ஆளானது. 

 

rajendra balaji

 

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 322 பதின்மப்பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் இன்று விருதுநகர் வந்தனர். 

 

முன்னதாக விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, உடன் இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். தமிழகத்தில் கலைஞரின் அடையாளமாக இருந்த மஞ்சள் துண்டை, அதிமுக அமைச்சராக இருந்துகொண்டு, பொது இடத்தில் அணிவது ஆச்சரியம்தான் என்று  அந்த இடத்தில் முணுமுணுப்பு கிளம்பியது. அங்கிருந்து நிகழ்ச்சி நடந்த கல்லூரிக்குச் செல்லும் வரையிலும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக, அந்த மஞ்சள் துண்டு அவர் தோளிலேயே கிடந்தது. இதைப் பார்த்து அமைச்சர் செங்கோட்டையன்,   “என்னப்பா இது? விருதுநகர் மாவட்டத்துல உங்க அமைச்சர்ல இருந்து  நம்ம கட்சிக்காரங்க அத்தனை பேரும் மஞ்சள் மஞ்சளா தெரியுறீங்க?” என்று கேட்டே விட்டார். 

 

rajendra balaji

 

‘மஞ்சள் துண்டு போட்டால் பெரிய பதவியைப் பிடிக்கலாம்னு ஜோசியர் யாரும் அமைச்சர்கிட்ட சொல்லிட்டாங்களோ என்னமோ?’ என்று அங்கே ஒருவர் சத்தமில்லாமல் கமெண்ட் அடிக்க, அமைச்சர் தரப்பில் ஒருவர்,  மஞ்சள் துண்டு அணிந்ததற்கான காரணத்தை விளக்கினார். 

 

“பொதுவாக, அமைச்சரின் விசுவாசிகள் பலரும் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் சட்டை அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஏனென்றால், வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். குருவின் நற்பார்வை கிடைப்பதற்கு, மஞ்சள் நிற ஆடை அணிந்து, அவரை மகிமைப்படுத்துவார்கள். ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. வீட்டில் இருக்கும்போது மஞ்சள் துண்டு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. அதுவும், இன்று குருப்பெயர்ச்சி என்பதால், அமைச்சர் செங்கோட்டையன் பக்கத்தில் இருந்தும்,  கட்சித் தொண்டர் ஒருவர் போட்ட மஞ்சள் துண்டு, அவர் தோளிலேயே கிடக்கும்படி பார்த்துக்கொண்டார்.” என்றார். 

 

அமைச்சர் மஞ்சள் துண்டு அணிந்ததில் மர்மம் எதுவும் இல்லையென்றால் சரிதான்!

 

சார்ந்த செய்திகள்