Skip to main content

“பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
BJP  divisive dreams will never work says CM Stalin

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால், மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக போன்ற கட்சிகள் தென் மாநிலங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து வருகின்றனர் என்று பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் பேசியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “பத்தாண்டுகால சாதனைகள் என்று எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியில் பயணத்திட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயண சுதந்திரத்தை தந்ததோடு பெண்களுக்கு பல வகையிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது.

பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை என புது புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர். 2019 ஆம் ஆண்டு மூன்று கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த மெட்ரோ பயணங்கள் 2023 ஆம் ஆண்டில் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்து இருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் விரிவாக்கத்துக்கு நிதி தராமல் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி உண்மைகளை மறைத்து விடியல் பயணத்திட்டத்தின் மீது வீண் பழி சுமத்தி இருக்கிறார்.

பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகளைக் கொண்ட ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார். பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது.பொய்மை உடைக்கப்பட்டு, வெறுப்பு அகலும் இந்தியா வெல்லும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான முதல்வரின் எக்ஸ் தளத்தில்,” தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர் பொறுப்பில் இருந்து கொண்டே ஒரு மாநில அரசின் மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும். இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர்கள் பிரதமர் என்பதை மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும்; ஜூன் 4 இந்த பொய்கள் உடைக்கப்படும் வெறுப்பாகும் இந்தியா வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்